பக்கம்:அனிச்ச மலர்.pdf/10

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

அனிச்ச மலர்

எல்லாரிடமும் கடுவன் பூனையாக நடந்து கொள்ளும் ஹாஸ்டல் வார்டன் மாலதி அம்மாள்கூட அவளிடம் சிரித்துக் குழைந்து பேசுவாள். இதைப்போல் பலவற்றை நேரில் பார்த்தும் கேள்விப்பட்டும்தான் அவளுடைய முகராசியைப் பற்றித் தோழிகள் பேசிக் கொள்ளத் தொடங்கியிருந்தனர். சென்ற ஆண்டின் இறுதியில் கல்லூரி விடுதி நாள் கொண்டாட்டத்தின் போது முழுவதும் மாணவிகளே நடித்த ‘சகுந்தலை’ நாடகம் நிகழ்ந்தபோது பிரதம விருந்தினராகப் பிரபல நடிகர் ஒருவர் வந்திருந்தார். சுமதிதான் சகுந்தலையாக நடித்திருந்தாள்.நாடக முடிவில் அந்த நடிகர் நாடகத்தைப் பாராட்டிப் பேசும் போது, “சகுந்தலையாக நடித்த குமாரி சுமதி காவியத்தில் காளிதாசன் படைத்த சகுந்தலையைவிட அழகாயிருக்கிறார். அவருடைய தோற்றத்தையும் நடிப்பையும், எவ்வளவு பாராட்டினாலும் தகும்” என்று சிறிது தாராளமாகவே அவளைப் பாராட்டிப் பேசியிருந்தார்.

இவை எல்லாம் சேர்ந்து அவளுள் ஒரு கனவையே உருவாக்கியிருந்தன. தான் நடித்துப் புகழ்பெறப் பிறந்தவள் என்ற எண்ணம் அவளுள் உறுதிப்படத் தொடங்கியிருந்தது. கர்வம் அவளை மற்ற மாணவிகளிலிருந்து தனியே பிரித்தது. எல்லாரும் கலகலப்பாகப் பேசும்போது அவள் அவர்களோடு சகஜமாகப் பேசாமலிருப்பதும் எல்லாரும் மெளனமாக எதிலாவது ஈடுபட்டிருக்கும்போது அவள் கலகலப்பாகப் பேசி அனைவர் கவனத்தையும் கவர்வதுமாகத் தனக்குத்தானே ஒரு புது இயல்பையே உருவாக்கிக் கொண்டிருந்தாள் அவள் தான், மற்ற பெண்களைவிட அழகானவள், உயர்ந்தவள் என்று தனக்குத்தானே வலிந்து ஒர் அந்தஸ்தைப் புரிந்து கொண்டதன் காரணமாக ஏற்பட்ட இனிய ஆணவம்-அது தொடர்பாக அவளைப் பல கனவுகள் காண வைத்திருந்தது.

அந்தப் பெண்கள் கல்லூரியின் விடுதி நாள் கொண்டாட்ட நாடகத்தில் சுமதியின் நடிப்பைப் பாராட்டி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அனிச்ச_மலர்.pdf/10&oldid=1148240" இலிருந்து மீள்விக்கப்பட்டது