பக்கம்:அனிச்ச மலர்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா.பார்த்தசாரதி

119


பட்ட ஒரு கத்தை நியூஸ்பேப்பர் கிளிப்பிங்ஸை எடுத்து மேஜை மேல் போட்டாள் வார்டன் மாலதி சந்திரசேகரன். அந்த நியூஸ் பேப்பர்'கட்டிங்ஸ்'எல்லாவற்றிலும் அவள் செம்பரம்பாக்கம் வெளிப்புறப் படப் பிடிப்புக் காட்சிகளில் கலந்துகொண்டது முதல் காஷ்மீர் புறப்படுகிற யூனிட்டோடு புறப்பட்டுச் சென்றதுவரை படங்களோடு செய்திகள் பிரசுரமாயிருந்தன. தன்னுடைய பொய், பச்சையாகக் கையும் களவுமாகக் கண்டு பிடிக்கப்பட்டுவிடவே சுமதி எதுவும் சொல்ல முடியாமல் கண்கலங்கி நின்றாள். "உங்க மதரோட கூட மதுரைக்கு நான் ட்ரங்க் ஃபோனில் பேசியாச்சு. இந்த 'வீக் எண்டிலே' உங்க மதர் இங்க வரா. நோட்டீஸ் போர்டிலே நீ பார்த்தது பழசு. லேடஸ்ட்டா நானும் பிரின்சிபாலும் உன்னை 'டிஸ்மிஸ்' பண்ணிக் காலேஜிலிருந்து அனுப்பிடறதுன்னு முடிவு பண்ணியாச்சு...”

சுமதிக்கு ஏதோ கெஞ்சிக் கதற வேண்டும் என்று தோன்றியது. ஆனால் வார்த்தைகள் எதுவும் வரவில்லை; நெடுமரம்போல் சும்மா நின்றாள் சுமதி.

"ஒரு படிக்கிற பொண்ணுக்கு இத்தனை சூதுவாது, பொய் எல்லாம் இருந்தா எப்பிடி உருப்படப்போறே நீ? உங்கம்மா என்னாடான்னா நீ பிரமாதமாப் படிச்சுக் கிழிச்சு 'டிஸ்டிங்க்ஷனோட' பாஸ் பண்ணப் போறதா சொப்பனம் கண்டுண்டிருக்கா! நீயானால் கண்ட கண்ட சினிமாக் காலிப்பசங்களோடல்லாம் ஊர் சுத்திண்டிருக்கே. இதென்ன காலேஜ்னு நினைச்சியா? இல்லே சத்திரம், சாவடின்னு நினைச்சியா?”

"இந்த ஒரு தடவை மன்னிச்சிடுங்க வார்டன்! ஏதோ தெரியாத்தனமா...”

"சும்மாக் கதை அளக்காதேடீ! தெரியாத்தனமாவது ஒண்ணாவது?. தெரிஞ்சு விரும்பி ஆசைப்பட்டு வேனும்னுதானேடீ நீ இதெல்லாம் பண்ணியிருக்கே?”

"ஐ டோண்ட் வாண்ட் டு ஸீ யுவர் டர்ட்டி ஃபேஸ். கெட் அவுட், ஐ ஸே கெட் அவுட்”.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அனிச்ச_மலர்.pdf/121&oldid=1131722" இலிருந்து மீள்விக்கப்பட்டது