பக்கம்:அனிச்ச மலர்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

124

அனிச்ச மலர்


லீவு எடுத்துக் கிட்டுப் போனாள். அது பற்றி எனக்குச் சந்தேகமா இருக்கு. அங்கே வந்திருக்காளா, இல்லியா?ன்னு வார்டன் மதுரைக்கு ஃபோன் பண்ணிக் கேட்டப்பவே எனக்குப் பகீர்ன்னுது. உன்னைப் பெத்த வயித்துலே பெரண்டையை வச்சுத்தான் கட்டிக்கணும்." -அருகே வந்து அம்மாவை மேலே பேச விடாமல் வாயைப் பொத்தினாள் சுமதி. தர தரவென்று அம்மா கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு கன்னையா தனக்கு ஒழித்துவிட்டிருந்த தனி அறையை உட்புறம் தாழிட்டுக் கொண்டாள். அப்புறம் நிதானமாக ஒரு சிறிதும் பதறாமல் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க எதிரே நின்ற அம்மாவைப் பார்த்து,

"எதுக்கும்மா இப்படி கத்தித் தொலைக்கறே? இப்போ என்ன குடிமுழுகிப் போச்சு?” என்று கேட்டாள் சுமதி. அம்மாவோ உணர்ச்சிக் கொந்தளிப்பின் விளிம்பில் இருந்தாள்.

“என்ன குடிமுழுகிப் போச்சுன்னாடீ கேட்கிறே? குடிமுழுகறதுக்கு இன்னும் என்னடீ மீதமிருக்கு? நீ கேக்கறதைப் பார்த்து எனக்கு வயிறு பத்தி எரியறதேடீ? கூத்தாடிச்சியாப் போறதுக்குத் தலையெடுத்துப் படிப்பை உதறிப்பிட்டு வந்தயேடீ பாவி! உங்கப்பா மட்டும் இப்ப உசிரோட இருந்தார்னா உன் கழுத்தைத் திருகிக் கொன்னுடுவார்...”

"ஏன்? முடிஞ்சா நீயே இப்ப அதைச் செய்யேன் அம்மா? யாராவது கொன்னுட்டாத்தான் எனக்கும் நிம்மதி"--இதைச் சொல்லும்போது சுமதியின் கண்களில் நீர் மல்கியது . சுமதி அழுவதைப் பார்த்துத் தாயின் மனம் சிறிது இளகியது. அதனால் தாயின் குரலில் வெறுப் பின் கடுமை மாறிச் சிறிது பாசமும் கனிவும் வந்தன.

“எப்பிடிடீ இதுக்கெல்லாம் துணிஞ்சே; மான அவமானமும்கூட உறைக்கலியாடி உனக்கு? உன்னைப் படிக்கிறதுக்கு மெட்ராஸ் அனுப்பினேனா, இல்லே இப்படிக் கண்ட தடிப்பசங்களோட சினிமா 'டான்ஸ்னு' ஊர் சுத்தறதுக்கு அனுப்பினேனாடீ? முன்னே பின்னே தெரியாத

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அனிச்ச_மலர்.pdf/126&oldid=1117351" இலிருந்து மீள்விக்கப்பட்டது