பக்கம்:அனிச்ச மலர்.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

170

அனிச்ச மலர்

 என்னைத் தேடிவந்து கழுத்தறுக்கிறீங்க! என் பேரைக் கெடுக்கிறதுக்கா? போம்மா போ! கோடம்பாக்கத்திலே சினிமா எக்ஸ்ட்ராக்களுக்கு வைத்தியம் பண்ற டாக்டரம்மாக்கள் யாராவது இருப்பாங்க. ஐயாம் நாட் ஸோ சீப். அங்கே போய் யாரையாவது பாரும்மா” என்று பாதி எழுதியிருந்த ’ப்ரிஸ்கிரிப்ஷனை’ அப்படியே கிழித்துக் கீழே இருந்த குப்பைத் தொட்டியில் எறிந்தாள் அந்த டாக்டரம்மாள். சுமதிக்கு உடம்பெல்லாம் வேர்த்துக் கொட்டிவிட்டது.

"இது கெளரவமானவங்க வர்ர டிஸ்பென்ஸ்ரி ! இங்கெல்லாம் இனிமே நீ வராதே. இப்ப நீ வந்ததை நான் இரகசியமாக வச்சுக்கிறேன். யாரிட்டவும் சொல்லலே. ஆனா நீ இங்கே இனிமே வரப்பிடாது” என்ற கண்டிப்பான குரலில் மறுபடியும் சொன்னாள் அந்த டாக்டரம்மாள். சுமதிக்கு முகத்தில் அடித்தாற் போலிருந்தது அந்தப் பதில்.

24

திருவல்லிக்கேணி டாக்டரம்மாள் வீட்டிலிருந்து திரும்பும்போது சுமதியும் மேரியும் தங்களுக்குள் ஒருவருக்கொருவர் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. பரஸ்பரம் ஒருவர் மீது ஒருவர் கோபித்துக் கொண்டவர்கள் நிர்ப்பந்தமாக ஒருவருக்கருகே மற்றவர் உட்கார நேர்ந்தது போல் அவர்கள் அப்போது உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். எதுவும் பேசவில்லை என்றாலும், அவளும் உள்ளூரக் கவலையிலாழ்ந்திருப்பதை அவள் முகமே காட்டியது. சுமதியோ கண்களில் நீர் வடிய வீற்றிருந்தாள். நடுவே ஒரே ஒருமுறை மட்டும் மேரி சுமதியின் தோளில் தட்டி "வேண்டாம் அழாதே! எல்லாம் சரிப்படுத்திக்கலாம்” என்று ஆறுதலாகச் சொன்னாள். சுமதி கோபத்தோடு அப்போது மேரியின் கையைத் தன் தோளிலிருந்து நீக்கி வெடுக்கென்று உதறினாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அனிச்ச_மலர்.pdf/172&oldid=1147402" இலிருந்து மீள்விக்கப்பட்டது