பக்கம்:அனிச்ச மலர்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

அனிச்ச மலர்


சுமதியும் விமலாவும் ஹாஸ்டல் மெஸ்ஸில் பகலுணவை முடித்துக் கொண்டு புறப்பட்டிருந்தார்கள். இருவரும் விடுதியை விட்டுக் கிளம்பி மெயின்ரோட்டுக்கு வந்து பஸ் நிறுத்தத்தில் நின்றபோதுதான், விமலாவுக்குத் தான் ‘மணிபர்ஸ்' எடுத்துவர மறந்துவிட்டது ஞாபகம் வந்தது.

"சுமதி! நீ இங்கேயே நில்லுடி! நான் பர்ஸை மறந்து அறையிலேயே வச்சிட்டு வந்துட்டேன். ஒரு நிமிஷத்திலே ஒடிப்போயி எடுத்திண்டு வந்துடறேன்” என்றாள் விமலா.

"எல்லாச் செலவுமா அஞ்சு ரூபாய்க்கு மேலே போகாதுன்னா நீ திரும்ப ரூமுக்குப் போகவேண்டாம். எங்கிட்டேய இருக்குடி விமலா! சமாளிச்சுக்கலாம். வா" என்று சுமதி சொல்லியும் விமலா கேட்கவில்லை.

"பரவாயில்லேடீ! நான் ரூமுக்கே போய் எடுத்துண்டு வந்துடறேன். கையிலே கொஞ்சம் பணம் வச்சிண்டு வெளியிலே புறப்படறதுதான் நல்லது” என்று சொல்லிக் கொண்டே அறைக்குத் திரும்ப நடக்கத் தொடங்கி விட்டாள் விமலா, விமலா போனபின் அவள் தலை கல்லூரிக் காம்பவுண்டுக்குள் மறைந்ததுமே பஸ் நிறுத்தத்தில் சுற்றும் முற்றும் நின்றவர்களைக் கவனித்தாள் சுமதி. அந்தப் பஸ் நிறுத்தம் வம்புக்கும் கலகத்துக்கும் பெயர் பெற்றது. பெண்கள் கல்லூரிக்கு அருகில் இருந்ததினால் வம்பு செய்யும் மாணவர்களின் குழு ஒன்று அங்கு நிரந்தர மாக இருக்கும். அன்று விடுமுறை நாளானதால் மாணவர்களின் கூட்டம் எதையும் காணோம். ஆனால் வேறு ஆட்கள் இருந்தார்கள். அவளருகே இடுப்பில் லுங்கியும், கழுத்தில் கட்டிய கலர்க் கைக்குட்டையுமாகத் தலை சீவாத பரட்டைத் தலை ஆண்கள் இருவர் பஸ்ஸுக்காக நின்று கொண்டிருந்தனர். இருவரும் தன் பக்கமே வைத்த கண் வாங்காமல் பார்ப்பதைக் கண்டு சுமதி முகத்தை சுளித்தாள். அவசரமாகத் தன் பார்வையை அவர்கள் பக்கமிருந்து அவள் மீட்டுவிட்டாலும் அவர்களுடைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அனிச்ச_மலர்.pdf/70&oldid=1116963" இலிருந்து மீள்விக்கப்பட்டது