பக்கம்:அனிச்ச மலர்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

97


"பரவாயில்லை! வாம்மா. சாப்பாட்டுக்கு அப்புறம் பார்க்கலாம். முடிஞ்சா உனக்கே இன்னொரு 'டுப் போட்டுக்கலாம், என்று அயராமல் சொல்லியபடி அருகே வந்து சுமதியைத் தோளில் தட்டிக் கொடுத்தார் தயாரிப்பாளர். ஒரு சின்ன 'டுப் காட்சியைக்கூட ஒரே ஷாட்டில் கச்சிதமாகச் செய்து கொடுக்க முடிய வில்லையே என்று கூச்சமாகவும், வெட்கமாகவும் இருந்தது சுமதிக்கு.

"இந்தாப்பா ! உங்களைத் தானே? இங்கே அக்கம் பக்கத்துக் கிராமத்திலே யாராவது மீனவர் கம்யூனிட்டிப் பொண்ணுங்க இருந்தால் கூட்டிக்கிட்டு வாங்க. தண்ணிரிலே குதிக்கிற காட்சிக்கு அவங்களிலே யாரா வது ஒருத்தரைப் பயன்படுத்திக்கிட்டு அப்புறம் கரை யிலே ஒதுங்கறப்போ முதுகு மட்டும் தெரியறமாதிரி சுமதியை ஒரு ஷாட் எடுத்துக்கலாம்” என்ற தயாரிப் பாளரே சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது ஒரு யோசனை கூறினார்.

'பெரிய நடிகருக்கோ, நடிகைக்கோ தான் 'டுப்போடுவாங்க. ஆனா நம்ம புரொட்யூஸர் சார் குந்தளகுமாரிக்கு உன்னை 'டுப்' போட்டுட்டு உனக்கே இன்னொரு டுப் போடப்போறாரு உம்மேலே உள்ள பிரியத்திலேதான் இதெல்லாம் செய்யறாரு” என்றாள் மேரி.

தண்ணிரில் பயப்படாமல் சகஜமாகக் குதிக்கத்தக்கக் கூடிய ஒரு துணிச்சல்காரியான மீனவப் பெண்ணைத் தேடி ஆட்கள் பறந்தார்கள். அரைமணி நேரத்தில் அப் படிப் பட்ட பெண்மணி ஒருத்தியையும் கண்டுபிடித்து அழைத்து வந்துவிட்டார்கள். ஒரு மேட்டிலிருந்து அவளைத் தண்ணிரில் குதிக்கச் சொல்லி ‘லாங் ஷாட்’டில் எடுத்துக் கொண்டார்கள். கச்சிதமாக ஒரே ஷாட்டில் அது முடிந்து விட்டது.

தயாரிப்பாளர் அந்த மீனவப் பெண்ணுக்கு இருபத்தைந்து ரூபாய் கொடுத்தார்.

அ.ம.-7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அனிச்ச_மலர்.pdf/99&oldid=1146914" இலிருந்து மீள்விக்கப்பட்டது