பக்கம்:அனுபவக் களஞ்சியம்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

 வெறும் படிப்பும், பதவியும் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு உதவாது என்று ஒரு முடிவுக்கு வந்து, அந்த உத்தியோகத்தையும் உதறிவிட்டு முழுநேர எழுத்தாளனாக வாழ நேர்ந்த காலம் எனக்கு கடுமையான சோதனைக் காலம்.

அடுத்தடுத்து ஏற்பட்ட ஆயிரமாயிரம் சோதனைகள், அலறாமல் துடிக்க வைத்த அதிமோசமான சூழ்நிலைகள் எல்லாம் சிறந்த அனுபவங்களாக எனக்குத் தோன்றின. இன்னும் பெற வேண்டும் என்றும் தூண்டின.

எனது நூல்களை நானே பதிப்பித்து, விற்றாக வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டபொழுது, தினந்தினம் புதிய புதிய மனிதர்களை சந்திக்க வேண்டிய நிர்ப்பந்தம்.

அப்படிப்பட்ட அகங்காரமான சூழ்நிலையில், அவதிப்பட்ட அலங்கோலமான மனோநிலையில், பெறப்பட்ட அனுபவங்கள் எல்லாம் என்னை தட்டிக் கொட்டி பக்குவமான மனோபாவத்திற்கு உட்படுத்தி அழைத்துச் சென்றன.

வந்த அனுபவங்களை முனுமுனுக்காமல் வாங்கிக் கொண்டேன். கசப்பான அனுபவங்களை மறந்து விடவும், இனிப்பான அனுபவங்களை தொடர்ந்து பெறவும் பழகிக் கொண்டேன்.

அத்தகைய கசப்பும் இனிப்பும் கலந்த அனுபவங்களை யாரிடமாவது பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நினைத்த போது, விளையாட்டுக் களஞ்சியத்தில் தொடர்ந்து எழுத ஆரம்பித்தேன்.