பக்கம்:அன்னக்கிளி (வல்லிக்கண்ணன்).pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அன்னக்கிளி

101


வேண்டும் என்று உத்தரவிட்டாள். அதற்கு முன்னரே மூன்று காவலாட்கள் பிறர் சந்தேகிக்காத வகையில் சென்று தக்க இடங்களில் பதுங்கி நிற்கவேண்டும்; அவன் மூட்டையை எடுக்க வரும்பொழுது அவனைப் பிடித்துக் கொள்ளவேண்டும்; அவனுடைய கைகளையும் கால்களையும் கட்டி அவனைத் தூக்கி வந்து தனக்கு முன் நிறுத்த வேண்டும் என்று திட்டம் செய்தாள்.

இவற்றைக் கவனித்து முடித்ததும் அமுதவல்லி அவசரம் அவசரமாகத் தனது அறைக்குச் சென்றாள்.அவள் பார்வை கண்ணாடியருகே சென்று மோதியது. அவள் உள்ளத்தில் ஒரு பதைப்பு உண்டாயிற்று. 'ஆங்!' என்று கத்திய அமுதம் தன் கைகளால் கழுத்தைத் தடவிக் கொண்டாள்.

இல்லைதான்; நாலுவடம் முத்தாரத்தைக் காணவில்லை தான்!

15. மெல்லியல் வல்லியின் கல்நெஞ்சம்

'அன்னம்... ஏய் அன்னக்கிளி!'

அமுதவல்லியின் குரல் வீடெங்கும் அதிர்ந்தது. அதில் கோபம் கனன்று கொண்டிருந்தது. அன்னக்கிளி எதிரொலி தருவதற்குள்ளே அது பலமுறை அதட்டும் தொனியாய், அலைபாய்ந்தது.

'பிராட்டியாருக்கு என்னவோ ஆத்திரம்' என்று பணி மகளிர் முனகிக்கொண்டனர். அன்னக்கிளி பாய்ச்சல் நடையில் படிகளைத் தாவி, தலைவியின் முன்வந்து நின்றாள்.