பக்கம்:அன்னக்கிளி (வல்லிக்கண்ணன்).pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அன்னக்கிளி

113


குதித்து விட்டதும் அவன் கலத்தில் வைத்திருந்த பொருள்களை அவர்கள் கைப்பற்றிக்கொண்டனர். அவர்களுக்கு முக்கியமான சிறு பெட்டியும் கிடைத்துவிட்டது. கலத்தின் தலைவனுக்கும் மாறனின் ஆட்களுக்கும் தகராறு ஏற்பட்டது. நான் பாண்டிய மன்னனின் முத்திரைக் கணையாழியையும் கட்டளை ஓலையையும் காட்டியதும் எல்லோரும் அடங்கி ஒடுங்கினர். வைரவாளும் பொன் முடியும் இருந்த பெட்டியை நான் கைப்பற்றிக்கொண்டேன், கலகம் செய்ய ஆசைப்பட்டவர்களை அடக்குவதற்கு, நாம் முன்னதாகவே ஏற்பாடு செய்திருந்த வீரர்கள் உதவியாயிருந்தனர். சம்பந்தப்பட்ட அனைவரையும் சிறைபிடித்து, உன் வருகைக்காகக் காத்திருப்பதைவிட, இளையமன்னரை எதிர்கொண்டு வரவேற்கலாமே என்று கிளம்பினேன். இளைய அரசர் தமக்கு ஒரு அரசியைத் தேடிக்கொண்டுவிட்டதால், நான் இருவருக்கும்சேர்த்து வாழ்த்தும் வணக்கமும் அறிவிக்கிறேன்!'

மருதுபாண்டியனின் நீண்ட பேச்சு மற்றவர்களுக்கு வியப்பளித்தது. திருமலைக்கொழுந்து மதுரையிலிருந்து செங்கோலோச்சும் பாண்டியனின் இளவல் என்பதை அவர்கள் அப்போதுதான் அறிய முடிந்தது. எல்லோரும் பணிவுடன் வணங்கி வாழ்த்துக் கூறினார்கள்.

அன்னக்கிளிக்கு ஏற்பட்ட ஆச்சரியத்திற்கும் ஆனந். தத்துக்கும் ஓர் அளவே கிடையாது. அவள் பெருமை யோடும் பெருமகிழ்ச்சியோடும் திருமலையின் முகத்தை நோக்கிப் புன்முறுவல் பூத்தாள். அவனும் சிறுநகை காட்டி அன்போடு நோக்கினான்.