பக்கம்:அன்னக்கிளி (வல்லிக்கண்ணன்).pdf/20

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

அன்னக்கிளி

அவளுக்குத் தூக்கம் வரவேயில்லை. ஊஞ்சல் அருகில் எரிந்து கொண்டிருந்த ஒற்றை விளக்கையும் அவள் அணைக்கவில்லை.

‘இன்று தங்களை அவசியம் எதிர்பார்த்துக் காத்திருப்பேன். கண் உறங்கேன். விழி திறந்து வழி நோக்கிக் காத்திருக்கும் எனக்குத் துணையாக ஒரு விளக்கும் ஒளி சிமிட்டி நிற்கும்!' என்று அவள் எழுதியிருந்தாள். அன்னக் கிளி எடுத்துச் சென்ற சேதியின் சுருக்கம் இதுதான்.

"இளமாறன் வரமாட்டான்' என்று சொன்னது ஒரு மனம். 'அவன் வரமாட்டானா?’ என ஏங்கிய உள்ளம், 'வந்தாலும் வந்துவிடுவான்’ என்று தூண்டி அவள் தூக்கத்தையும் அமைதியையும் கெடுத்தது.

அமைதியற்ற மென்காற்றுபோல் அறையினுள் அப்படியும் இப்படியும் திரிந்தாள் அமுதவல்லி. ஒரு சாளரத்தின் அருகே நின்று அந்தப் பக்கத்திலிருந்த தோட்டத்தைக் கவனித்தாள்.

அப்பொழுது தேய்பிறை நிலவு உதயமாகிச் சிறிது நேரமாகியிருந்தது. அதன் மங்கல் ஒளி எங்கும் சோக மயமான வெளிச்சம் பூசியிருந்தது. தோட்டத்தின் மரங்களும், பூச்செடிகளும், கொடிகளும் விந்தைத் தோற்றங்கள் காட்டிக் கொண்டிருந்தன. அவற்றிடையே எழுந்த ஓர் அசைவு அழகியின் கவனத்தை ஈர்த்தது.

பதுங்கிப் பதுங்கி முன்னே வருவதும், பாய்ந்து பின்னோடுவதும், தயங்குவதுமாகப் பொழுது போக்கும் அது யாராக இருக்கக்கூடும்?

ஒரு வேளை இளமாறனாக இருக்குமோ? என்று பதை பதைத்தது அவள் மனம். 'இராது. அவன் நேரே வாச