பக்கம்:அன்னக்கிளி (வல்லிக்கண்ணன்).pdf/24

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

அன்னக்கிளி

 தனது பேதமையை எண்ணிப் பெருமூச்சு உயிர்த்தாள் அமுதவல்லி. அவளது மனச் சுமையை அதிகப்படுத்தும் தன்மையிலே கண்முன் உயர்ந்து நின்றது ஒரு உருவம். ஒற்றை விளக்கின் மங்கலான ஒளியிலே திடுமென வந்து நின்ற தோற்றம் பிரமையோ பேயுருவோ அல்ல என்று திடப்படுத்திக்கொள்வதற்கு அவளுக்கு மிக்க நெஞ்சுரம் தேவைப்படத்தான் செய்தது.

காட்டிலிருந்து தப்பி வந்த கரடியோ என மலைக்கச் செய்யும் தோற்றம். குரூபமான முகமும், குழிக்குள் இடுங்கிய கண்களில் மனசின் கடுமையைப் பிரதிபலிக்கும் ஒரு மினுமினுப்பும், எதிரே நிற்பவரைத் துன்புறுத்துவதில் தான் பெறும் இன்பத்தைக் காட்டும் முகபாவமும் பெற்று நின்றது ஒரு மனிதனே. அகன்ற தோள்களும், பரந்த மார்பும், கல்போன்ற சதைத் திரட்சிகளைப்பெற்ற கைகளும் கால்களும் அவனை வலியன் என்று கூறின; வனப்புள்ளவன் என்று காட்டவில்லை. அவன் உரத்த குரலில் சிரித்தான். ஐந்தாறு வெண்கலப் பாத்திரங்களை உருட்டி விட்டாற்போலே ஒலி கலகலத்துப் புரண்டது. அவன் பற்கள் விகாரமாய்ப் பளிச்சிட்டன.

'பிராட்டியார் என்னை இவ்வேளையில் இங்கு எதிர் பார்த்திருக்கவில்லை அல்லவா?’ என்று கேட்டான் அவன், அந்த உருவத்துக்கு ஏற்ற குரலாகத்தான் அமைந்திருந்தது அது.

விழியில் கனல் எழ உறுத்து நோக்க முயன்றாள் அமுதவல்லி. எனினும், உள்ளத்தின் பதை பதைப்பு ஒடுங்கவில்லை. 'போ வெளியே! இங்கு உனக்கு என்ன வேலை?’ என்று சீறினாள் அவள். அது உணர்ச்சி மிகையால் கிரீச்சிடும் குரலாய் நீண்டது.