பக்கம்:அன்னக்கிளி (வல்லிக்கண்ணன்).pdf/46

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அன்னக்கிளி

39

 'இது எனக்குத் தெரியாது. இந்த வண்டி இந்நகரத் தலை மக்களில் ஒருவரான திருமாறனுடையது. அவர் மாளிகை இருக்குமிடம்...' என்று விளக்கமாகத் தெரிவித்தாள் அன்னம்.

அது கிடக்கட்டும். முதலில் நீ களைப்பாறவேண்டும். நாங்கள் உன்னை உன் இல்லத்தில் கொண்டு சேர்க்கிறோம். உன் அன்னை பயந்து கொண்டிருப்பாள்...' என்று திருமலை சொல்லவும் அவள் நெடுமூச்சு உயிர்த்தாள்.

'எனக்குத் தாயும் இல்லை, தந்தையுமில்லை. அமுத வல்லிதான் என்னை ஆதரித்து வருகிறாள். அவள் எனக்குச் சிற்றன்னை உறவு வேண்டும். மிக நெருங்கிய உறவும் அல்ல. அவளுக்கு என்னிடம் அதிக அன்பு இருப்பதாகவும் சொல்ல முடியாது. பார்க்கிறவர்களில் பெரும்பாலோர் அவளைத் தலைவி என்றும் என்னைப் பணிப்பெண் என்றும் எண்ணுவது வழக்கம்...'

'முரடன் எவனோ வீட்டினுள் புகுந்துவிட்டான் என்றாயே; அவன் என்னென்ன செய்திருக்கிறான் என்று கவனிப்போம். நாங்களும் உன்னோடு வருகிறோம் என்றான் திருமலை.

'எயிலூர் ஆந்தை இன்னுமா அவ்வீட்டில் இருப்பான்’.

'யார், ஆந்தையா? அவனா அங்கு வந்தவன்?' என்று கேட்டான் மருது. அவன் குரலில் தனியானதொரு பதற்றமும் ஆர்வமும் துடித்தன.

ஆமாம். காட்டுக் கரடிபோல் வளர்ந்த தடியன்...'

அவனேதான். அவன் அங்கேயே இருக்கிறானா பார்ப்போம்' என்ற திருமலை, பூஞ்செண்டை எடுப்பது