பக்கம்:அன்னக்கிளி (வல்லிக்கண்ணன்).pdf/51

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

அன்னக்கிளி


திருமலையும் மருதுபாண்டியனும் வேலையாளுடன் சென்றனர். வண்டி நிற்க வேண்டிய இடம் சேர்ந்ததும் வீரர்கள் இருவரும் திகைத்தனர். 'ஆ! அந்த வண்டி எங்கே!' என்று திடுக்கிட்டான் மருது, அங்கே வண்டி எதுவும் இல்லாததால்!

7. கவனத்தைக் கவர்ந்தவை

அமுதவல்லிக்குப் பொழுது நன்றாக விடியவில்லை; இரவு நேரம் தந்த ஏமாற்றமும் மனக் குழப்பமும் வேதனைகளும் அவள் உள்ளத்தையும் உணர்வையும் வெகுவாகப் பாதித்துள்ளன என்பதை அன்னக்கிளிதான் முதலில் உணர நேர்ந்தது.

வீட்டின் முன்னே வந்து நின்ற வண்டி இளமாறனுடையது என அறிய நேர்ந்ததும் அமுதவல்லி அடைந்த பரபரப்பு, அவ் வண்டி எப்படியோ மறைந்து போய் விட்டது என்று தெரிந்து கொண்டதும் இனம் புரிந்து கொள்ள முடியாத மனக் குழப்பமாக மாறியது.

தூக்கம் பிடிக்காமல் போனதால் எழுந்த கண் எரிச்சலோடு மன எரிச்சலும் சேர்ந்தது. 'ஏய் அன்னம்!’ என்று கடுகடுப்பாக அவள் கூவிய தோரணையே 'அம்மாளுக்கு மனசு சரியாயில்லை' என்று பணிப்பெண்கள் பலருக்கும் ஒலி பரப்பியது.

அன்னக்கிளி அடக்கமாக வந்து அவள் முன் நின்றாள். எங்கோ பார்வையைப் பதிய விட்டிருந்த தலைவி, சிறிது நேரத்துக்குப் பிறகே, அன்னம் அங்கு வந்து நிற்பதை உணர்ந்தவள்போல் காட்டிக்கொண்டாள். 'ஆமாம்; அது