பக்கம்:அன்னக்கிளி (வல்லிக்கண்ணன்).pdf/53

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

அன்னக்கிளி

 'ஆந்தை கூடச் சொல்லவில்லையா, அவர் இப்போது வேறு எங்காவது இருக்கலாம் என்று! ஆந்தையே அந்த வண்டியில் வந்திருக்கலாமே. திருமாறனிடமிருந்தே தகவல் அறிந்துகொண்டு...'

அவள் மேலும் பேசியிருப்பாள். ஆனால், அமுதவல்லி வெடுக்கெனக் கத்தினாள், 'சீ, வாயை மூடு!’ என்று. 'அவரைச் சந்தேகிக்க உனக்கு என்ன தகுதி இருக்கிறது? அவர் ஏன் ஆந்தையோடு நட்புகொள்ள வேண்டும்? நான் அவரை வருமாறு அழைத்திருக்கும்போது, அவர் எதற்காக ஆந்தையை அனுப்பவேண்டும்?' என்று கடுகடுப்பாகக் கூறினாள்.

அன்னக்கிளி வாய் திறவாது நிற்பதே சாலச் சிறந்தது என மதித்து, சிலையாகிவிட்டாள்!

'அது சரி. குதிரைமீது வந்தது யார்?’ என்று, அன்னம் எதிர்பாராதவேளையில் அவள் எதிர்பார்த்திராத கேள்வியை வீசினாள் தலைவி.

'எனக்குத் தெரியாது அம்மா. யாரோ வழிப்போக்கராக இருக்கும். தெய்வம்போல் வந்து காப்பாற்றினார்' என்று அன்னக்கிளி சொன்னாள். அதை அவள் கூறும் போதே அவள் முகம் நன்றிப் பெருக்கினாலும், உளம் கனிந்த மகிழ்ச்சியாலும் மலர்ச்சிபெற்றது. அவள் கண்களில் சுடரொலி சேர்ந்தது.

அவள் முகத்தை உற்று கோக்கியபடி இருந்த அமுதவல்லியின் உள்ளத்தில் சிறு கொதிப்பு ஏற்பட்டது. 'தெரியாது என்று ஏன் பொய் சொல்கிறாய்? தெரியாத அந்நியனோடுதான் ஆனந்தமாக உட்கார்ந்து உலா வருவதில்