பக்கம்:அன்னக்கிளி (வல்லிக்கண்ணன்).pdf/56

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அன்னக்கிளி

49

 'உண்மையை அறிந்தால் உங்களுக்கு மனவேதனை ஏற்படலாம், அல்லது ஆத்திரம் உண்டாகலாம்...'

'உனது வெறும் பேச்சை எல்லாம் கேட்க நான் விரும்பவில்லை. உண்மையாம்! மகா உண்மையை இவள் தான் கண்டுபிடித்துவிட்டாள்! திருமாறனுக்கு இங்கு வரச் சம்மதம் இல்லை என்று சொல்வாய். அப்படித்தானே?' என்று படபடத்தாள் அமுதம். 'நீ இப்பொழுதே புறப்பட வேண்டும். இந்தக் கடிதத்தை அவரிடம் கொடு. மறு மொழி பெறும் வரை நீ அங்கேயே காத்திருக்கவேண்டும்’ என்றாள்.

அன்னக்கிளி மேலெழுந்த நெடுமூச்சைத் தலைவி அறியாமல் அமுக்கிவிடப் பெரிதும் முயன்றாள். கடிதத்தைப் பெற்றுக்கொண்டு நடந்தாள். அவள் நடையிலே துடிப்பு இல்லை. முகத்திலே உவகை இல்லை. தயங்கித் தயங்கி நடந்து செல்லும் அன்னத்தையே கவனித்துக் கொண்டிருந்த அமுதம், 'இவளுக்குத் திடீரென்று ஏன் இந்தக் கிறுக்கு?' என்று முனகிக்கொண்டாள்.

அன்னக்கிளி சென்ற பின்னர் சிறிது நேரம் அமுத வல்லி படுக்கையிலேயே சோம்பிக் கிடந்தாள். பிறகு எழுந்து அப்படியும் இப்படியும் நடக்கலானள். அவள் பார்வை குறிப்பற்று வெளியுலகின் காட்சிகள் மீது புரண்டு திரிந்தது.

அப்பொழுது வெயில் நன்றாகக் காய்ந்து கொண்டிருந்தது. உறைப்பாகவே விழுந்தது அது. காற்றின் அசைவு சிறிதுகூட இல்லாத அவ் வேளையில் நண்பகலை எட்டிக் கொண்டிருந்த பொழுதில், வெயிலின் சூடு தாங்காமல் தாவர இனமும் உயிர் வர்க்கங்களும் கிறங்கிக் கிடக்கின்ற