பக்கம்:அன்னக்கிளி (வல்லிக்கண்ணன்).pdf/67

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

அன்னக்கிளி

 வரவேற்புரை கூறலாம் என நினைத்தாள். தானாகவே சிரித்தாள். உணர்ச்சிப் பரவசத்தால் அவள் பித்திபோல் நடந்து கொண்டாள்.

திருமாறன் இயல்பான மிடுக்குடன் புகுந்தபோது அமுதவல்வி முகம் திரிந்து நோக்கவுமில்லை; எரிஎழ விழிக்கவுமில்லை. மகிழ்வுடன் உபசரித்து, உற்சாகமாக உரையாடவே முன்வந்தாள்.

'பிராட்டியாருக்கு என்மேல் கோபம் அதிகம் இருக்கும், அப்படித்தானே?’ என்று திருமாறன் இளநகையோடு வினவவும் 'இவர் மீது கோபம் கொள்வது எங்ஙனம்?' என்றே தோன்றியது அவளுக்கு. அத்தகைய வசீகரம் அவன் முகத்தில் கொலுவீற்றிருந்தது.

'இரவு முழுவதும் விழித்து, எதிர்பார்த்துக் காத்திருந்தவளுக்கு ஏமாற்றமே கிட்டியதென்றால் வருத்தமும்,கோபமும் வராமலா இருக்கும்?' என்று அவள் கேட்டாள். குரலிலே சிடுசிடுப்பு காட்டவேண்டும் என்ற எண்ணம் அவளுக்கு இருந்தது. எனினும் அவள் பேச்சில் குழைவுதான் இழைந்தோடியது.

விளக்கம் கோரி விடுக்கப்பட்ட வினாவாக அதை ஏற்றுக் கொள்ளாமல் -எதிர்பார்த்துக் காத்திருந்தவளுக்கு ஏமாற்றம் அளிக்க நேர்ந்ததற்கு ஏதேனும் காரணம் சொல்ல வேண்டிய பொறுப்பு தமக்கு உண்டு எனக் கருதாமால் -- திருமாறன் கவலையற்ற சிரிப்பு சிரித்து வைத்தான்.

'இரவில் உங்கள் வண்டி இந்தப் பக்கம் வந்து நின்றதாமே?’ என்று கேட்டாள் அழகி.