பக்கம்:அன்னக்கிளி (வல்லிக்கண்ணன்).pdf/71

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

அன்னக்கிளி

 அவள் கவலை அவளுடையது என ஒதுக்கி விடுகிறவன் போல் திருமாறன் கையை வீசினான். 'நான் ஏன் வந்திருக்கிறேன் என அறிந்துகொள்ளும் ஆவல் உனக்கு இல்லை போலும்' என்றான்.

'இரவில் நீங்கள் வரவில்லை என்றதும் நான் எவ்வளவு கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன் தெரியுமா? உங்கள் வண்டி வெளியே நின்றது என்று கேள்விப்பட்டதும், அதிலிருந்து நீங்கள் வரவில்லேயே என்று உணர்ந்ததும் ஆந்தை உங்களைத் தாக்கி அப்புறப்படுத்திவிட்டு அவனே இங்கு வந்திருப்பானோ என்று அஞ்சினேன்...”

'மறைந்து நின்று என்னைத் தாக்குவதற்கு எவன் துணிவான் இந்தப் பாண்டி நாட்டிலே?’ என்று பெருமையோடு அறிவித்தான் திருமாறன். 'அமுதா!' என்று அன்பு கனியும் குரலில் அழைத்தான்.

இன்பத்தேன் பாய்ந்தது அமுதவல்லியின் காதுகளில்! உள்ளத்திலே ஆனந்தம் ஊற்றெடுத்தது. 'இன்னுமொரு தடவை அப்படி அழைக்க மாட்டாரா?' எனும் ஏக்கம் எழுந்தது. ஆசை துளும்பும் விழிகளோடு, குறுநகை இதழ்களை அழகு செய்ய, முகம் முழுமதி என ஒளிர, அவள் ஒயிலாக அசைந்து அவனை நெருங்கினாள்.

'அமுதா! நீ ஏன் அந்த முத்துமாலையை அணிவதே இல்லை?’ என்று கேட்டான் அவன்.

குளிர் பூம்புனல் ஓடை என்று நம்பிக்கையோடு கால் வைத்தால் அது கொதிக்கும் நீர் என்ற உண்மையை சூடாக உணர்த்தினால் எப்படி இருக்குமோ அவ்வாறு பதறினாள் அமுதவல்லி. இருப்பினும் தனது திகைப்பையும் தடு