பக்கம்:அன்னப் பறவைகள்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

 கீதம் பாடினர். அதனால் அவர்களுடைய உள்ளத்தில் நம்பிக்கையும் வீரமும் பொங்கிப் பெருகின.

வைகறையில் காற்று அமைதியாகவும் பரிசுத்தமாகவும் வீசிக் கொண்டிருந்தது. சூரியன் உதித்தவுடன், அன்னங்கள் எழிலியைத் தூக்கிக்கொண்டு பறந்து சென்றன. காற்றில் மிதந்து கொண்டே, அவள் பனிபடர்ந்த மலைச் சிகரங்கள் பலவற்றைக்கண்டாள். அவைகளின் நடுவில் மாபெரும் அரண்மனை ஒன்று இருந்தது. அதன் நீளம் மட்டுமே ஒரு மைல் இருக்கும். அதைச் சுற்றி வரிசை வரிசை யாகக் கமுக மரங்கள் ஓங்கிவளர்ந்திருந்தன. வண்ண வண்ணமான மலர்களுடன் பல பூச்செடிகளும் அழகு செய்துகொண்டிருந்தன. 'இந்த இடத்திற்கா நாம் செல்கிறோம்?' என்று அவள் கேட்டாள். அன்னங்கள் இல்லையென்று தலைகளை அசைத்தன. அந்த அரண்மனையும் தோட்டங்களும் துரவுகளும் மார்கானை என்ற ஒரு தேவதையினுடையவை. விவரம் தெரிந்த மனிதர் எவரும் அந்தப் பக்கத்தில் போகவே மாட்டார். எழிலி அங்கேயே பார்த்துக்கொண்டிருக்கையில், எத்தனையோ மாற்றங்களைக் கண்டாள். நிலங்களும் மலைகளும் நிறம் மாறின. கட்டிடங்களின் உருவங்களும் மாறி மாறிக் காட்சி யளித்தன. சூரியன் சாய்வதற்கு வெகு நேரத்திற்கு முன்பே அவளும் சகோதரர்களும் குன்றுகள் சூழ்ந்த ஒரு பெரிய குகையை அடைந்தனர். குகையைச் சுற்றித் திராட்சைக் கொடிகள் படர்ந்திருந்தன.

கடைசி சகோதரன் எழிலிக்குத் தான் துயில வேண்டிய இடத்தைக் காட்டினான். அப்பொழுது, 'இன்றிரவு இங்கே நீ என்ன கனவு காண்கிறாய் என்று பார்ப்போம்!' என்றான்.

'கனவில் உங்களைக் காப்பாற்ற ஒரு வழி தெரிந்தால் போதும்!' என்று அவள் சொன்னாள். அதிலிருந்து அவள் உள்ளத்தில் அதே சிந்தனை நிறைந்து விட்டது. படுப்பதற்கு முன் அவள் இறைவனை மனமாரப் பிரார்த்தனை செய்தாள்; உறக்கத்திலும்கூடப் பிரார்த்தனை நிற்கவில்லை. இடையில் அவள் தேவதை மார்கானையின் அரண்மனைக்குப் பறந்து செல்வதுபோல் தோன்றிற்று. தேவதை அவளிடம் வரும்பொழுது ஒளி மயமாகத் திகழ்ந்து கொண்டிருந்தாள். ஆயினும் உற்றுப் பார்க்கையில் அவள் முன்னொரு நாள் கண்ட கிழவியைப் போலவும் தோன்றினாள். அந்தக் கிழவிதான் அன்னங்களைக் கண்டதாக அவளிடம் முதலில் சொன்னவள்.