பக்கம்:அன்னப் பறவைகள்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

19

அவள் மன்னனையும் மக்களையும் மயக்கி வைத்திருக்கிறாள் என்பது அவருக்கு உறுதியாகி விட்டது.

மதகுரு கண்டவிஷயத்தை அரசனும் கேள்விப்பட்டான். எழிலி தன் பக்கம் நிற்காமலே அவசரமாக அறைக்குள்ளே சென்றதையும் அவன் கவனித்திருந்தான். அடுத்த நாள் இரவும், அதற்கு அடுத்த நாள் இரவும் எழிலி சட்டைகள் பின்னிக்கொண்டிருந்தாள்; மேற் கொண்டு ஒரு சட்டைதான் பின்ன வேண்டியிருந்தது. மீண்டும் நார் தீர்ந்து போய்விட்டது. எனவே, அவள் மீண்டும் இரவில் தனியாக இடுகாட்டுக்குச் செல்ல நேர்ந்தது. அவள் போன பின்பு, மதகுருவுடன் அரசனும் சேர்ந்துகொண்டு, தொடர்ந்து சென்றான்.

நடந்ததையெல்லாம் நேரில் பார்த்த மன்னன், 'இனி மக்கள் தாம் இதை விசாரித்துத் தீர்ப்புக்கூற வேண்டும்!' என்று வருத்தத் தோடு சொன்னான். அவளுடைய இரகசியமான போக்குவரத் துக்களைப் பற்றிக் கேட்ட பொதுமக்கள், "இவள் சூனியக்காரிதான்!' என்று முடிவு செய்தனர். அக்கால வழக்கப்படி அவளை நெருப்பில் கொளுத்திவிட வேண்டும் என்று முடிவும் கூறப்பட்டது.

எழிலி தன் அழகான அறையை விட்டு வெளியேறி, இருளடைந்த சிறையில் கம்பிகளை எண்ணிக்கொண்டிருந்தாள். பொன்னுக்கும் பட்டுக்கும் பதிலாக அவள் பின்னியிருந்த சட்டைகளே அவளுக்கு மானத்தைக் காத்துக்கொள்ள அளிக்கப்பட்டன. முட் செடிகளின் கட்டு அவளுக்குத் தலையணையாக - வைக்கப்பட்டது. அந்த நிலையிலும், அவள் தன் வேலையைத் தொடர்ந்து செய்யலாம் என்று மகிழ்ச்சியே அடைந்தாள். கடவுளைத் தொழுதுவிட்டு, அவள் வேலையைத் தொடங்கினாள்.

மாலை நேரத்தில் வெளியே ஏதோ சிறகுகள் அடிப்பதுபோல் ஓசை கேட்டது. அவளுடைய கடைசிச் சகோதரன் அவள் இருக்கு மிடம் அறிந்து, அன்ன உருவில் அங்கே வந்திருந்தான். மறுநாள் இரவுதான் அவளுடைய கடைசி இரவாக இருக்கும். அந்த நிலையிலும், அவளைக் கண்டதிலேயே அவன் ஆனந்தக் கண்ணீர் பெருக்கினான். எழிலுக்கும் மகிழ்ச்சிதான். கடைசிச் சட்டையும் முடியும் தருவாயிலிருந்தது. அவளுடைய சகோதரர்கள் அவள் இருக்கும் இடத்திற்கு அருகில் வந்துவிட்டார்கள் என்பதையும் அவள் தெரிந்து கொண்டாள்.

சுண்டெலி ஒன்று அன்றிரவு அவளுக்கு மிகவும் உதவி செய்தது. தொலைவில் கிடந்த நார்களை அது வாயால் இழுத்து