7
குடியானவன் வீட்டில் எழிலி எப்படியோ பொழுது போக்கிக் கொண்டிருந்தாள். வியாடுவதற்குப் பொம்மைகளில்லை, துணைவியருமில்லை. அவள் கீழே கிடந்த ஓர் இலையைப் பொறுக்கி யெடுத்து, அதிலிருந்த ஒரு துளை வழியாகப் பார்த்துக் கொண்டேயிருந்தாள். அப்படிக் கவனித்தால், தன் சகோதரர்களைக் கண்டுவிடலாம் என்று அவள் எண்ணிணாள் போலும்! காலம் கழிந்து கொண்டேயிருந்தது.
அவளுக்குப் பதினைந்து வயது நிரம்பியது. அப்பொழுது அவள் அரண்மனைக்குத் திரும்ப வேண்டும் என்பது இராணியின் ஏற்பாடு. இராணி அவளைக் கண்டதும் பெருமூச்சு விட்டுக் கலங்கினாள். எழிலி பேரழகுடன் ஒளிர்ந்து கொண்டிருந்தது அவளுக்குப் பிடிக்கவில்லை. அவள் கொதித்தாள். ஆனால், அரசர் எழிலியைப் பார்க்க ஆசை கொண்டிருந்ததால், அவள் எழிலியையும் ஓர் அன்னமாக மாற்றிவிடாமலிருந்தாள். ஆயினும் அவள் வேறு ஒரு திட்டம் வைத்திருந்தாள்.
மூன்று பச்சை நிறத் தவளைகளைக் கொண்டு வந்து, அவள் குளிப்பறையிலிருந்த நீரில் மிதக்கவிட்டாள். அவைகளில் ஒன்று இளவரசியின் தலையில் அமர வேண்டும்; மற்ற ஒன்று நெற்றியிலும், மூன்றாவது நெஞ்சிலும் அமர வேண்டுமென்று அவள் தன் மந்திர சக்தியால் ஏற்பாடு செய்தாள். தவளை தலையில் இருந்தால், எழிலியும் அதைப் போல கறுகறுப்பில்லாமல் மக்காக மாறிவிடுவாள்; தவளை நெற்றியில் இருந்தால், அவள் முகம் முழுதும் விகாரமாகி விடும். தவளை நெஞ்சிலேயிருந்தால், இதயத்தில் கவலைகள் அதிகமாகும்.
இத்தகைய திட்டத்துடன் இராணி எழிலியைக் குளிப்பறைக்குப் போகச் சொன்னாள். அங்கே மூன்று தவளைகளும் தங்களுக்குக் குறிப்பிடப்பட்ட இடங்களில் ஏறி அமர்ந்து கொண்டன. ஒரு பாவமும் அறியாத இளவரசியின் உடலைத் தீண்டியவுடன், அவைகள் செந்நிறப் பூக்களாகி விட்டன. மந்திர வித்தை அவளிடம் பலிக்க வில்லை!
இதை அறிந்து கொண்ட அரசி அவள் தலையிலும், முகத்திலும் வேப்பமுத்துக்களை மாவாக்கிப் பூசி வைத்தாள். கூந்தலை விகார மாகப் பின்னித் தொங்கவிட்டாள். அந்த நிலையில் எழிலியைக் கண்டவர்களுக்கு அவளை அடையாளமே தெரியாது. அரசர் அவளைப் பார்த்ததும், 'இவள் என் மகளில்லை!' என்று சொல்லிவிட்டார்.