பக்கம்:அன்னை கஸ்தூரிபாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/19

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

17


 காந்தியின் தமையனார் உதவியால் நீதிமன்றம் வருவோருக்கு மனுக்களை எழுதிக் கொடுத்து வருமானம் தேடினார். இந்த நேரத்தில் அவரது அண்ணன், கரிம் ஜவேரி என்ற ஒருவரை அறிமுகப்படுத்தி வைத்தார்.

இந்த கரீம் ஜவேரி, தென் ஆப்ரிக்காவில் இருந்த தாதா அப்துல்லா என்ற பெரிய வியாபாரச் சீமானுக்கு நண்பர், அந்த வியாபார நிறுவன உரிமையில் இவர் பாகஸ்தர். அவர்களுடைய வழக்கு ஒன்று தென் ஆப்ரிக்காவில் அப்போது நடைபெற்றுக் கொண்டிருந்தது.

அந்த வழக்குக்கு உதவி செய்ய காந்தியை ஜவேரி அழைத்தார். காந்தியும் ஒப்புக் கொண்டார். இருப்பினும் தனது இல்லத் தரசியை விட்டுவிட்டுப் போக அவருக்கு மனமில்லை.

இருந்தாலும், தென் ஆப்ரிக்காவுக்குப் போயே ஆக வேண்டும் என்ற தொழில் விருப்பத்தால் "ஒரு வருடத்தில் திரும்பி வந்து விடுகிறேன்" என்ற வாக்குறுதியை மனைவிக்குக் கொடுத்துவிட்டு விடைபெற்றார்.

இளம் வயதிலேயே இரண்டு பேருக்கும் பால்ய விவாகம் நடந்ததாலும், எப்போதும் அந்தத் தம்பதிகள் சேர்ந்து வாழக் கூடாது என்பதற்காகவும் இருவரும் அடிக்கடி பிரிக்கப்பட்டு, தாய் வீடு, மாமனார் வீடு என்று பிரிந்து வாழும் வாழ்க்கையினை நடத்தி வந்தார்கள்.

இப்போது சதி, பதி இருவருமே எல்லா விவரமும் தெரிந்து கொண்ட பின்பும், பிரிவுத்துயரத்தைக் கஸ்தூரி பாய் ஏற்கவேண்டிய துன்பநிலை உருவானது. இருபத்து நான்கு வயதான பின்பும், இரு குழந்தைகளை ஈன்ற பின்பும் கூடவா பிரிவுத் துன்பம் என்று எண்ணி, தனது தந்தை வீட்டிலேயே அவர் வாழ்ந்தார்.