பக்கம்:அன்னை கஸ்தூரிபாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/21

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

19


அவர் உலகில் பிரபலமான ஒரு போராட்ட வீரர் என்ற புகழைப் பெற்று விட்டார்.

"ஒராண்டுக்குள் திரும்பி வந்து விடுகிறேன்” என்று கஸ்தூரி பாயிடம் வாக்களித்து விட்டு சென்ற காந்தியடிகள் மூன்றாண்டுகள் வரை தென்னாப்பிரிக்காவில் தங்கும் நிலை ஏற்பட்டு விட்டது. அவர் நடத்திய போராட்டம் முடிந்ததும் காந்தி இந்தியா திரும்பினார்.

இந்தியா திரும்பி வந்த அவர், தென்னாப்ரிக்க இந்தியரின் உரிமைகளை மீட்டுக் கொடுத்து விட்டுத் திரும்பியதால், இந்தியாவில் உள்ள தலைவர்களையும், பத்திரிகை ஆசிரியர்களையும் சந்தித்து நடந்த விவரங்களை உலகுக்கு உணர்த்தினார்.

பிறகு, மனைவி கஸ்தூரி பாயையும், தனது இரு குழந்தைகளையும், சகோதரி மகனையும் தன்னோடு அழைத்துக் கொண்டு, மீண்டும் தென்னாப்ரிக்காவுக்கு கப்பல் ஏறிப் புறப்பட்டார்.

ஆப்பிரிக்காவிலுள்ள டர்பன் துறை முகத்தைக் கப்பல் அடைந்தது. இதைக் கேள்விப்பட்ட தென்னாப்ரிக்க ஆங்கிலேயர் ஆட்சி, காந்தி மீண்டும் தென்னாப்ரிக்கா வருவதை விரும்பவில்லை.

காந்தியடிகள் பயணம் செய்து வந்த கப்பல் தாதாபாய் நிறுவனத்துக்கு உரிமையானது. அதனால், காந்தியை மீண்டும் இந்தியாவுக்கே திருப்பி அனுப்பி விடுமாறும், அதற்கான செலவுகளை கப்பல் நிறுவனத்துக்குக் கொடுத்து விடுவதாகவும் ஆங்கிலேயர் அரசு தாதாபாயிடம் தெரிவித்து விட்டது. அதற்கு கப்பல் உரிமையாளர் இணங்காமல் மறுத்து விட்டார்.