பக்கம்:அன்னை கஸ்தூரிபாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/42

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

அன்னை கஸ்தூரிபாயின்


ஒன்றுதான்! அதே நேரத்தில் காந்தியடிகளுக்கு என்ன வயது என்றால் முப்பதரை ஆண்டுகள்.

சிற்றின்ப ஆசைகள் தீவிரமாக இருக்கும் வயது இருவருக்கும். என்றாலும், தனது கணவர் பிரம்மச்சாரிய விரதம் இருக்கப் போவதாக கூறியதும், சற்றும் தயங்காமல் ”சரி உங்களது விருப்பம் அதுவானால் நான் குறுக்கிடமாட்டேன்” என்று கூறி சம்மதம் தெரிவித்து வாழ்நாள் முழுவதும், சாகும் வரையிலும் இருப்பேன் என்று இணக்கம் தெரிவித்த இல்லத்தரசியாக விளங்கினார் கஸ்தூரி பாய்! அவ்வாறே தான் இறக்கும்வரையும் கடைப்பிடித்தார்.

இதே நேரத்தில், கஸ்தூரிபாய் இடத்தில் வேறோர் பெண் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்? காந்தியடிகளாருடைய பிரம்மச்சரிய நோன்பு வெற்றி அடைந்திருக்குமா? பாதிக் கிணறு தாண்டியவன் கதியல்லவா ஏற்பட்டிருக்கும்?

ஆனால் ஒன்று உறுதி. கணவர் கூறிவிட்டார் என்பதற்காக மட்டும் எதையும் சிந்திக்காமல் ஏற்றுக் கொள்கிறவர் அல்லர் அன்னை கஸ்தூரிபாய். 'எப்பொருள் எத்தன்மைத்தாயினும், அப்பொருளில் மெய்ப்பொருள் காணும் அறிவுத்திறம் பெற்ற தாயுள்ளம் கொண்டவர் அவர்.

எதிலும் சுயேச்சையாக சிந்திக்கும் தகுதி உடையவர் அவர் என்பதால், கணவர் காந்தியடிகள் தன்னைக் கலந்து ஆலோசித்ததும், இந்த விரதத்தால் உலகம் என்ன வியத்தகு வரலாற்றுச் சம்பவங்களைப் பெறுமோ என்று எண்ணி, தயங்காமல் சரி என்று சம்மதம் கூறி ஏற்று இணங்கியதுடன், அந்த வாக்குறுதியை தான் சாகும்வரை பிடிவாதமாக, சபதமாக, வைராக்கியமாகக் கடைப்பிடித்து காந்தியடிகளாரின் ஞான வேட்கையை வெற்றி பெறச் செய்தார் கஸ்துர்பா காந்தி!

xxx