பக்கம்:அன்பின் உருவம்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

iv

களுக்கு உரை எழுதியவர்களும், நூல் முழுவதுக்கும் எழுதியவர் களும் உண்டு. மறைமலையடிகள் முதல் நான்கு பாட்டுக்கு உரை எழுதியிருக்கிறார். மகாமகோபாத்தியாய பண்டிதமணி மு. கதிரே சன் செட்டியாரவர்கள் திருச்சதகம், நீத்தல் விண்ணப்பம், திரு வெம்பாவை ஆகியவற்றிற்குக் கதிர்மனிவிளக்கம் என்ற விரிவுரை எழுதியிருக்கிறார். யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த நவநீதகிருஷ்ண பாரதியாரவர்கள் திருவாசகம் முழுமைக்கும் உரை எழுதிப் பதிப்பித்திருக்கிறார். கா. சுப்பிரமணிய பிள்ளை முதலியவர்களும் எழுதியிருக்கிறார்கள்.

இந்தப் புத்தகத்தில் திருவாசகத்திலிருந்து எட்டுப் பாடல்களும் திருக்கோவையாரிலிருந்து ஒரு பாடலும் விளக்கம் பெறுகின்றன. பதவுரை, பொழிப்புரை, விளக்கவுரை என்ற முறையில் பாடல்களை நான் விளக்கவில்லை. முதலில் நிலைக்களத்தை அமைத்துக்கொண்டு பாடற்பகுதிகளை ஒவ்வொன்றாக எடுத்துக் காட்டி முடிவில் பாட்டு முழுவதையும் சொல்லும் முறையையே இந்த வரிசையில் மேற்கொண்டிருக்கிறேன். அவையில் விரிவுரை ஆற்றும் முறையில் இவை இருக்கும். பாடல்களிலுள்ள சொல்லின் பொருளைமாத்திரம் விளக்கினால் ஓரளவு தான் அவை உள்ளத்தில் பதியும். இத்தனை விரிவாகச் சொல்லிப் பாட்டைப் பிறகு சொன்னால் பாடல் முழுவதும் நன்றாகவும் தெளிவாகவும் பதியும் என்பதே என் நோக்கம். இதற்கு முன் வெளியான நூல்களைப் படித்தவர்கள், நான் கருதிய நோக்கம் கைக்கூடியதாகவே சொல்கிறர்கள்.

தமிழ்ப் புலவர்கள் படித்துப் பயன்பெற வேண்டும் என்ற நினைவோடு இவற்றை எழுதவில்லை. பள்ளியில் கீழ்வகுப்பில் படிக்கும் மாணவனுக்கும் விளங்கவேண்டும் என்ற எண்ணத்தால் விளக்கங்களையும் உண்மைகளையும் கதைகளையும் பெய்து இவ் வரிசையை எழுதி வருகிறேன். இம் மலர்மாலை முருகன் திருவருளால் முழுதும் நிறைவேறவேண்டும்.

கல்யாணபுரம்-மயிலே

12–3–55 கி.வா. ஜகந்நாதன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பின்_உருவம்.pdf/6&oldid=1178994" இலிருந்து மீள்விக்கப்பட்டது