பக்கம்:அன்பு மாலை.pdf/56

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

அன்பு மாலை


காண்பரிய சோதியாய் மறைதனக்கும் அரிதாய்க்
காணுகின்றபொருளுக்கும்காண்பதற்கும் அரிதாய்ப்
பூணுகின்ற மோனநிலை தன்னிலே நிற்பார்
பொற்புறவே அறிகின்ற பெரும்பொருளே ஆகி
நாணுகின்றோர் தமக்கரிதாய் நல்லோர்கள் தேசாய்
ஞானமுறும் பீடமாய் இருக்கின்ற பொருளைத்
தாணுவென நந்தமக்குக் காட்டுகின்ற நம்பன்
சார்ராம சுரத்குமார் யோகியெனும் ஞானி.

122


மறை - வேதம், தேசாய் - சோதியாய், தாணு - சிவபெருமான்.


கல்லாதார் வந்தாலும் கற்றவர்கள் வரினும்
காதலுடன் குழந்தைபோல் வரவேற்றே சிரிப்பான்;
அல்லார்கள் ஆனாலும் வல்லவர்கள் எனினும்
அவர்க்கெல்லாம் பேரருளை ஈந்துநலம் தருவான்;
சில்ஐயம் உளத்தகத்தே இருக்கின்ற காலைத்
திகழுமவன் திருமுன்னர் நின்றாலே போகும்;
புல்லர்கள் அறியாத பெருமையுள ஞானி
பொற்புடைய ராமசுரத் குமாரென்னும் ஐயன்.

123


சில் ஐயம் - சில சந்தேகங்கள். புல்லர்கள் - இழிந்தவர்கள்.


உலகெல்லாம் ஒருபொருளே இயங்குகின்ற தென்பது
ஓர்மின்என எந்நாளும் சொல்லிநமை உய்ப்பான்;
பலகலையும் கற்றோர்கள் வருவார்கள், பணிவார்;
பாமரர்கள் அவன்பாலே மிகப்பத்தி செய்வார்;
கலகமிடும் சமயமெலாம் அவன் முன்னே சென்றால்
காணாமே பட்டொழியும்; சாந்திவரும் அங்கே;
அலகிலதாம் பெரும்புகழ்சேர் அருணைநகர் தன்னில்
அருள்செய்யும் ராமசுரத் குமார்தன்னைப் பணிமின்.

125

ஓர்மின் - சிந்தியுங்கள், உய்ப்பான்-நடத்துவான், அலகு- அளவு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_மாலை.pdf/56&oldid=1303447" இலிருந்து மீள்விக்கப்பட்டது