பக்கம்:அன்பு வெள்ளம்.pdf/77

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

73


அனைத்தினும் ஓங்கி உயர்ந்து படர்ந்து தழைந்த இயேசு என்னும் தெய்விக மரத்தில் கிளைத்த கிளைகள்தோறும் அன்பின் கனி பழுத்துப் பயன்தரக் கிடைக்கின்றன.

அன்புடன் நடத்தல்

டத்தல் என்பது அன்றாட ஒழுக்கம். உன்னை நோக்கி அன்பில் நடந்துவந்த சால்பினரைப் போன்று உலகின் மாந்தர்களும் அன்பில் நடக்கிறார்கள்.

அன்பின் வழி நடந்தால், அன்பே அன்றாட ஒழுக்கமாகக் கொண்டால், அடடா! எவ்வாறு அழகான வாழ்க்கை அமைகிறது. செவிக்கினிய இன்னிசையும் சிரிப்பும் நிறைந்த இயற்கையின் உயிர்ப் பூங்காவன்றோ அன்பு!

ஆர்வமிக்க தயவார்ந்த செயல்கள், அன்பார்ந்த பார்வை, சிறு பரிசளிப்பு ஆகியவை அன்புடன் நடப்பதன் - ஒழுகுவதன் பிரிவுகளே!

காலையில் நமக்கு முன்பே கண்விழித்து எழுந்த அன்னை, தன் அன்பினைத் தன் குழந்தையிடம் கொண்டதன் வெளிப்பாடு அன்றோ வீட்டில் அங்கும் இங்குமாக அலைந்து தேடித் தேடிப் பொம்மைகளையும் விளையாட்டுப் பொருள்களைக் கொண்டு வந்து ஓரிடத்தில் சேர்ப்பது.

கணவன் கடமை ஆற்றிடச் செல்ல வேண்டியதற்கு ஆவன செய்வதும், பிள்ளைகள் பள்ளிக்கும் செல்ல வேண்டியதற்கான பணிகளையும் செய்து அதற்கும் முன்பாகக் காலை உணவையும் சமைத்து வைக்கிறார். உணவறையில் உணவருந்தும் பலகையில் உணவைப் பரிமாறி வைத்துவிட்டுக், கணவன் மட்டுமின்றி அன்புப் பிள்ளைகளும் ஒருவர் பின் ஒருவராக வருவதனை எதிர்பார்த்துக் காத்துக் கிடப்பாள். இல்லத்தரசியாக விளங்கும் அன்னை அவள்தான் அவ் வீட்டின் அரசி! பிள்ளைகளின் தந்தையும், தன் கணவனுமான தலைவன்தான் அரசர்! அந்த இல்லறப் பேராட்சியில் அவள் பெற்ற பிள்ளைகள்தாம் அர்சாங்கம். என்ன அற்புதமாக இடம்! ஆர்வமற்ற சொல் அங்கே பேசப்படுவதேயில்லை! தன்னல மிக்க செயல்கள் இல்லை அங்கே! அங்கே ஒவ்வொருவரும் அடுத்தவரை மகிழ்விப்பதற்காகவே வாழ்ந்து வருகிறார்களோ எனும்படி ஒரு வியப்பு நிலை!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_வெள்ளம்.pdf/77&oldid=1515483" இலிருந்து மீள்விக்கப்பட்டது