பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/103

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொகை - வகை - உரை த. கோவேந்தன்

101

புனத்தைக் காக்கும் தம் தொழிலை மறந்து கைவிட்டனர். அப்போது, யானைகள் தினைப்புனத்தைக் கவர்ந்து உண்ண, அதனைப் பொறுக்க மாட்டாமல் இளையவரும் முதியவரும் ஆகிய உறவினரெல்லாம் ஒன்றாய்க் கூடி, வில்லை ஆராய்ந்து கொண்டு திரிவர். இத்தன்மை பொருந்திய நம் தலைவனின் உறுதியற்ற இனிய சொல்லை உண்மை என நம்பித் தெளிந்த நெஞ்சமே இனி நமக்கு என்ன தீங்கு உண்டாகுமோ!” என்று தோழி தொடங்கிக் கூறியதைத் தலைவி சொல்லி முடித்தாள்.

449. நீ நல்லவள் தோழி

முடவு முதிர் பலவின் குடம் மருள் பெரும் பழம்
பல் கிளைத் தலைவன் கல்லாக் கடுவன்
பாடு இமிழ் அருவிப் பாறை மருங்கின்
ஆடு மயில் முன்னது ஆக, கோடியர்
விழவு கொள் மூதூர் விறலி பின்றை
முழவன் போல அகப்படத் தழீஇ
இன் துணைப் பயிரும் குன்ற நாடன்
குடி நன்கு உடையன்; கூடுநர்ப் பிரியலன்
கெடு நா மொழியலன், அன்பினன்’ என, நீ
வல்ல கூறி, வாய்வதின் புணர்த்தோய்
நல்லை; காண், இனி - காதல் அம்.தோழீஇ! -
கடும் பரிப் புரவி நெடுந் தேர்அஞ்சி
நல் இசை நிறுத்த நயம் வரு பனுவல்
தொல் இசை நிறீஇய உரை சால் பாண்மகன்
எண்ணு முறை நிறுத்த பண்ணினுள்ளும்
புதுவது புனைந்த திறத்தினும்
வதுவை நாளினும், இனியனால் எமக்கே.

- அஞ்சியத்தை மகள் நாகையார் அக: 352

“அன்புமிக்க தோழி! ஆராய்ந்து பார்க்குமிடத்து நீ மிகவும் நல்லவள்! வளைதல் பொருந்திய பலா மரத்தின் குடத்தைப் போன்ற பெரிய பழத்தைப் பல சுற்றத்துக்குத் தலைவனான ஆண் குரங்கு ஒலிக்கும் கற்பாறையிடத்தே, ஆடும் இயல்புடைய மயில் ஒன்று தன் முன் நிற்க, கூத்தர் விழாவைக் கொண்டாடும் முதிய ஊரில் விறலியின் பின்