பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/130

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

128

அன்பொடு புணர்ந்த ஐந்தினை - குறிஞ்சி

துறக்குவன் அல்லன் துறக்குவன் அல்லன்;
தொடர் வரை வெற்பன் துறக்குவன் அல்லன்
தொடர்புள் இனையவை தோன்றின, விசும்பில்
சுடருள் இருள் தோன்றியற்று
என ஆங்கு
நன்று ஆகின்றால் தோழி! நம் வள்ளையுள்
ஒன்றி நாம் பாடி, மறை நின்று கேட்டு அருளி,
மென் தோட் கிலுவனும் வந்தனன், நுந்ததையும்
மன்றல் வேங்கைக் கீழ் இருந்து,
மணம் நயந்தனள் அம் மலைகிழவோற்கே. - கலி 41

தோழி! வாழ்க! நாம் பாடுவோம், வா! எவ்வாறு பாடுவோம் என்றால், வாழி, தோழியே! நாம் இருவரும் அசையும் மூங்கிலின் நெல்லைப் பாறையாகிய உரலில் இட்டு, வன்மை வாய்ந்த யானைக் கொம்பான உலக்கையில் குற்றி நல்ல சேம்பினது இலைமுறமாய்க் கொண்டு புடைத்துப் பாடுவோமாக

நல்ல தோழி! இடிபட்டுத் தீயை உமிழ்ந்து ஒலித்து எங்கும் பெய்தது மழை. அதனால் இருண்டது. அத்தகைய நள்ளிரவு அந் நள்ளிரவில் மின்னல் உண்டாக்கிய ஒளியில் பெண் யானைகளுடன் வந்து புன்செய் நிலத்தில் மேய்வன யானைகள் அவற்றின் அடிகள் வைக்கும் நடையினது ஒசையைக் கேட்டனன் கானவன் உயர்ந்த மலையில் ஆசினிப் பலா மரத்தின் மேல் இட்ட பரணில் ஏறினன்; கடிய வேகம் உடைய கவணில் கல்லை வைத்து எறிய, அக்கல் முரிபட்ட மலையில் நின்ற வேங்கை மரத்தின் ஒளியுடைய மலர்களைச் சிதறும் ஆசினிப் பலாவினது மென்மையான பழம் கனிந்துள்ளவற்றை உதிர்க்கும். வண்டுக் கூட்டம் கட்டிய தேன் அடையைத் துளையுண்டாக ஊடுருவும். நல்ல பிஞ்சையுடைய மா மரத்தின் பசுமையான கொத்துகளைக் கலக்கும்; குலையை உடைய வாழையினது கொழுமையான மடலைக் கிழிக்கும்; பலாவின் பழத்துக்குள் போய்த் தங்கும் இத்தகைய வளம் உடையது தலைவன் மலை. அம்மலை யுடைய தலைவனைப் பாடுவோம், வா!