பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/14

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - குறிஞ்சி

எண் அரும் பிறங்கல் மான் அதர் மயங்காது
மின்னு விடச் சிறிய ஒதுங்கி, மென்மெல,
துளி தலைத் தலைஇய மணி ஏர் ஐம்பால்
சிறுபுறம் புதைய வாரி, குரல் பிழியூஉ
நெறி கெட விலங்கிய, நீயிர், இச் சுரம்
அறிதலும் அறிதிரோ?' என்னுநர்ப் பெறினே.

- பெருங்குன்றூர்க் கிழார் அக 8

தோழியே! “பெரிய ஆண் பன்றியைக் கொன்ற பிளவுடைய வாயையுடைய ஆண் புலி, பலா மரங்கள் செறிந்த பக்க மலைகளில் புலால் நாற்றம் உண்டாக அப் பன்றியை இழுத்துச் செல்லும். அங்கு மூங்கில்கள் ஒலிக்கும். அங்குச் சுரபுன்னை மரத்துடன் வாழை ஓங்கி வளர்ந்த தாழ்ந்த இடத்தையுடைய எப்போதும் நீர் நீங்காத குழி, அதில் ஆண் யானை அகப்பட்டது. அதன் வருத்தத்தைப் போக்குதற்கு அதன் பெண் யானை அந்த ஆண் யானை எறுதற்குப் படியாக அமைத்திடப் பெரிய மரத்தை முறித்தது. அதனால் உண்டான ஓசை வானத்தே அளாவிய மலைக்குகையில் சென்று ஒலிக்கும். இத்தகைய இயல்புடைய நம் தலைவர் நாட்டில், எண்ண இயலாத குன்றுகளின் பக்கமாகச் செல்லும் விலங்குகளின் நெறிகளில் மயங்கித் திரியாது மின்னலானது வழியைக் காட்டச் சிறுகச் சிறுகச் மெல்ல நடந்து,

ஈயல்கள் பொருந்திய புற்றின் மேற் பக்கத்தே தங்கிய புற்றாஞ் சோறான உணவையடைய பெரிய கைகளை உடைய ஆண் கரடி தொங்குகின்ற தோல் உறைக்குள் உள்ள கூர்மையான நகம் பற்றிக் கொள்வதால் பாம்பு தனது வலிமை இழந்தழியும். நள்ளிரவிலும் செல்லுதல், மழைத் துளியை உடைய நீலமணி போன்ற அழகிய கூந்தலைப் பிடரி மயிர் நிறையக் கோதி அதைப் பிழிந்து விட்டு வழிகள் செல்வதற்கு முடியாத படி பின்னிக் கிடக்கும் இச் சுரத்தின் நெறியை நீவிர் முன்பு அறிவீரோ என இரங்கி எவரேனும் வினவுவாராயின், நமக்குச் செல்ல அவ்வழிகள் அரியவை அல்ல! ஆனால் அவ்வாறு வினவுவோர் இல்லையே!” தலைவி தோழிக்குக் சொல்லுவதுபோல் ஒரு புறம் நிற்கும் தலைவன் கேட்பக் கூறினான்.