பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/191

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொகை - வகை - உரை த. கோவேந்தன்

189



தலைவன் நிலை

“நேர் இறை முன்கை பற்றி, நுமர் தர,
நாடுஅறி நல்மணம் அயர்கம்; சில் நாள்
கலங்கல் ஒம்புமின், இலங்குஇழையிர்” என,
ஈர நல் மொழி தீரக் கூறி,
துணை புணர் ஏற்றின், எம்மொடு வந்து,
துஞ்சா முழவின் மூதூர் வாயில்,
உண்துறை நிறுத்துப் பெயர்ந்தனன்

தலைவன் வரும் வழி அருமை, தலைவி கலங்கல்

அதற்கொண்டு
அன்றை அன்ன விருப்போடு, என்றும்,
இர வரல் மாலையனே, வருதோறும்,
காவலர் கடுகினும், கத நாய் குரைப்பினும்,
நீ துயில் எழினும், நிலவு வெளிப்படினும்,
வேய் புரை மென் தோள் இன் துயில் என்றும்
பெறாஅன்; பெயரினும் முனியல் உறாஅன்;
இளமையின் இகந்தன்றும் இலனே, வளமையின்
தன் நிலை தீர்ந்தன்றும் இலனே; கொன் ஊர்
மாய வரவின் இயல்பு நினை.இ, தேற்றி,
நீர் எறி மலரின் சாஅய், இதழ் சோரா
ஈரிய கலுழும், இவள் பெரு மதர் மழைக்கண்;
ஆகத்து அரிப்பனி உறைப்ப, நாளும்,
வலைப் படு மஞ்ஞையின், நலம் செலச் சாஅய்,
நினைத்தொறும் கலுழுமால் இவளே -

கங்குல்
அளைச் செறி உழுவையும், ஆளியும், உளியமும்,
புழற்கோட்டு ஆமான் புகல்வியும், களிறும்,
வலியின் தப்பும் வன் கண் வெஞ் சினத்து
உருமும், சூரும், இரை தேர் அரவமும்,
ஒடுங்கு இருங் குட்டத்து அருஞ்சுழி வழங்கும்,
கொடுந்தாள் முதலையும், இடங்கரும், கராமும்,
நூழிலும், இழுக்கும், ஊழ் அடி முட்டமும்,