பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/193

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொகை - வகை - உரை . த. கோவேந்தன்

191

பகை வேந்தரிடை நட்பமைதி செய்விக்க நின்ற சான்றோர் போல அச்சத்துடன் இவள்படும் துன்பத்திற்கும் நினைவுக்குமிடையில் யான் நிற்கின்றேன். ஒருவர்க்கு மகள் கொடுப்போர், நன்மை, குடிப்பிறப்பு, குணம் சுற்றம் இவற்றை ஒப்பிட்டு மேலும் பலரிடம் உசாவி நேர்வர் நாங்களோ உன்னையும் கேளாது உடன்பட்ட இக் கனவு நிகழ்ந்த தனைக் கூறுவேன் சினவாதே கேள்!

தினைக் காத்தலும் சுனையாடலும்

‘முத்துடை மூங்கிலைத் தின்ற யானை அவ் வருத்தம் நீங்க, மருப்புக்கிடையே தொங்கவிட்ட துதிக்கையினைப் போல, விளைந்து, வளைந்த தினைக் கதிர்களைக் கொள்ள வயல் வெளியில் வீழும் பறவைகளை ஒட்டிப் பகற் பொழுது கழியும்போது வருவீராக’ என்று கூறி நீ போக விட்டாய்! மரத்தின் மீது பொருந்திய புலி அஞ்சும்படியான பிரம்பினால் பின்னிய பரணில் ஏறித் தழல், தட்டை, குளிர் ஆகிய கருவி களால் முறையாகக் கிளிகளை ஓட்டினோம்.

வானகத்தில் பறக்கும் பறவைகளெல்லாம் கூடுகளில் சென்றடைய, கடல் குறையும்படியாக நீரை முகந்து கொண்டு முரச முழங்குவது போன்ற இடியோசையுடன் ஒழுங்காகச் செல்லும் முகிலானது இன்னிசை முரசும், ஒளியணி கலன்களும் உடைய முருகக் கடவுள் பகைவர்க்காக எடுத்த ஒளி வீசும் இலை வடிவான வேல் போல் மின்னியது வான் வெளியில் வீசும் காற்றுப் பட்டவுடன் மலை மேல் மழையாகப் பொழிந்தது உச்சிப் போதில், தலைவனுடைய நெடிய மலையின் கொடுமுடியினின்றும் குதிக்கின்ற தெளிந்த வெள்ளாடை போன்ற அருவியிலே மிக விருப்பத்துடன் நீராடினோம் செறிவான மலைச் சுனையின் பளிங்கு நீரிலே குடைந்து விளையாடினோம் பிறகு, எங்கள் மனதிற்குப் பிடித்த பாடல்களைப் பாடி யாடிய பின்பு, பொன்னிலே அழுத்திய நீலமணி போல சிறிய முதுகில் தாழ்ந்து கிடந்த எம்முடைய பின்னியிருந்த கரிய கூந்தலின் நீரைப் பிழிந்து ஈரத்தைப் புலர வைத்து, உள்ளிடமெல்லாம் சிவந்த விழிகளை உடையவர்களாக இருந்தோம்

அ ஐ-27