பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/44

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - குறிஞ்சி

யுடைய ஆண்புலி ஒளி வீசும் ஏந்திய கொம்பையுடைய ஆண் யானையைக் கொன்று முழங்கும் குளிர்ந்த பெரிய சோலையில் யாம் தமியம் என்று எண்ணாமல் இங்கு வந்தாய் இங்ஙனம் வந்த நீ எமக்கு அருள் செய்யவே வந்தா யேனும், அதைச் செய்யவில்லை அதற்கு மாறாகத் துன்பத்தையே செய்தாய்! நீ ஒரு நாள் வாராமல் இடைப்பட்டா லும் தலைவி உயிர் வாழாதவள் போல் உள்ளாள் அப்படியே நாள்தோறும் என் தோழியின் தோளில் தழுவுதலை நீயும் விரும்புகின்றனை சான்றோர் மிக்க காதல் கொண்டாராயினும் பழியோடு கூடிவரும் இன்பத்தை விரும்பமாட்டார் ஆதலால், நீ எம் தலைவியை எம் சுற்றத்தவரிடம் மகட் பேசித் திருமணம் செய்து கொண்டால் நினக்கு வரும் துன்பம் யாது?

கலைமான்கள் கூடித் தாழ ஒலிக்கும் மிளகுக் கொடி படர்ந்த மலைச் சாரலில் எய்துதற்கு அரிய காமத்தால் நீர் கூடிய களவொழுக்கத்தை அறியாத எம்மவர் தொன்று தொட்டு வரும் முறைப்படி மணம் நிகழ்ந்திட நீ இவளை மணந்து கொள்ளும் அந்த ஒழுக்கத்தைக் கண்ணாரப் பார்த்து யாம் அயலார் ஆகிய புதியவர் போன்று இவளுடைய புதிய நாணத்தால் ஆன ஒடுக்கத்தையும் காண்போம் அல்லேமோ?” என்று இரவுக்குறி வந்த தலைவனைத் தோழி மணக்கக் கூறினாள்


401. பகல் இரவுக்குறி தக்கவையல்ல


கறங்கு வெள் அருவி பிறங்கு மலைக் கவாஅன்,
தேம் கமழ் இணர வேங்கை சூடி,
தொண்டகப் பறைச் சீர் பெண்டிரொடு விரைஇ
மறுகில் தூங்கும் சிறுகுடிப் பாக்கத்து
இயல் முருகு ஒப்பினை, வய நாய் பிற்பட,
பகல் வரின், கவ்வை அஞ்சுதும், இகல் கொள
இரும் பிடி கன்றொடு விரைஇய கய வாய்ப்
பெருங் கை யானைக் கோள் பிழைத்து, இரீஇய
அடு புலி வழங்கும் ஆர் இருள் நடு நாள்
தனியை வருதல் அதனினும் அஞ்சுதும்.