பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை த. கோவேந்தன் : 145

ஆற்றில் ஒடும் வங்கத்தில் ஏறி எங்கேனும் போய்விடு வாரோ? போகார் அவர் எந்தச் செயலைச் செய்வார்? யாதும் செய்யார் இன்னே வருவார் நீ வருந்தாதே பிரிந்த தலைவன் வருவான்” என்று பிரிவிடை மெலிந்த தலைவிக்குத் தோழி உரைத்தாள்

245. வருந்தாதே வாடைக் காற்றே!

அட்டரக்கு உருவின் வட்டு முகை ஈங்கைத் துய்த் தலைப் புது மலர்த் துளி தலைக் கலாவ, நிறை நீர்ப் புனிற்றுப் புலம் துழைஇ, ஆனாய், இரும் புறம் தழுஉம் பெருந் தண் வாடை! நினைக்குத் தீது அறிந்தன்றோ இலமே, பணைத் தோள் எல் வளை ஞெகிழ்த்த எம் காதலர் அருஞ் செயல் பொருட் பிணிப் பிரிந்தனராக, யாரும் இல் ஒரு சிறை இருந்து, பேர் அஞர் உறுவியை வருத்தாதீமே! - ஆசிரியர் ? நற் 193 “பெருங் குளிர்ச்சியுள்ள வாடையே, அரக்கு உருக்கியது போன்ற சிவந்த வட்டமான மொட்டையுடைய ஈங்கையின் மென்மையான தலையையுடைய புதிய பூவின் பனித்துளி உன்னோடு கலக்கச் செய்வாய் அதனோடு நிறைந்த நீர் மிகுந்த புதிய இடங்களைத் துழாவுவாய் அங்கும் அமையாது எமது பெரிய முதுகுப் பக்கம் தழுவுவாய் யாம் உனக்குத் தீது செய்ய அறிந்ததில்லை, அப்படியிருக்க, எம்மை வருத்தாது விடுக எம் தோளும் ஒளியுள்ள வளைகளும் நெகிழும்படி செய்த எம் காதலர் அருஞ் செயலாகிய பொருளிட்டும் செயலில் உள்ளம் பிணித்தல் காரணமாகப் பிரிந்தனர் ஆதலால் யாருமில்லாத ஒரு பக்கமிருந்து பெரிய துன்பத்தில் அழுந்திக் கொண்டிருக்கும் எம்மை வருத்தாது கைவிடுக” என்று வாடைக் காற்றிடம் தலைவி சொன்னாள்

246. முகிலைக் கண்டதும் முனைந்து வருவான்

தோளே தொடி நெகிழ்ந்தனவே; நுதலே பீர் இவர் மலரின் பசப்பு ஊர்ந்தன்றே; கண்ணும் தண் பணி வைகின; அன்னோ!