மருதம் ஐங்குறு நூறு மன வேட்கை 1. தலைவி இருந்த நிலைமை ‘வாழி ஆதன், வாழி அவினி! நெற்பல பொலிக! பொன் பெரிது சிறக்க!' என வேட்டோளே யாயே; யாமே, 'நனைய காஞ்சிச் சினைய சிறு மீன் யாணர் ஊரன் வாழ்க! பாணனும் வாழ்க!' என வேட்டேமே!
ஓரம்போகியார் ஐங்குறு நூறு 1
'நாடு காவற் பொருட்டு ஆதன் என்பான் வாழ்க. அவனது
மரபிலே தோன்றிய அவினி வாழ்க. நாட்டு வயலில் நெல் மிகுந்து விளைக. பொன் மிக உண்டாகுக' என்று தலைவி இல்லறத்தை எண்ணி ஒழுகினாள். நாங்களோ மலர்களை நிறைய உடைய காஞ்சி மரமும் சினைகளையுடைய சிறு மீன்களும் உடைய ஊரன் வாழ்க. அவனுக்குத் தூதாய் வரும் பாணனும் வாழ்க என்று விரும்பியிருந்தோம்' என்று தோழி பிரிந்து திரும்பிய தலைவனைப் பார்த்துச் சொன்னாள்.
2.பிறவி தோறும் தொடர்க
‘வாழி ஆதன், வாழி அவினி! விளைக வயலே! வருக இரவலர்!' என வேட்டோளே, யாயே; யாமே, ‘பல் இதழ் நீலமொடு நெய்தல் நிகர்க்கும் தண் துறை ஊரன் கேண்மை வழிவழிச் சிறக்க' என வேட்டேமே. - - ஐங் 2