தொகை - வகை - உரை : த. கோவேந்தன்
149
மணம் கமழும் சோலையில் துயின்று, இன்றும் அப் பரத்தை யுடன் வையை நீர் வெள்ளத்தில் விளையாடி, ஈரம் உலராத மார்பை உடையையாய் என்னிடம் வந்து நின்று வேண்டு கின்றனை, நீ செய்த இப் பழிச் செயலை எமக்கு மறைத்தல் கூடுமோ? இயலாது!
கடல்நீர்ப் பரப்பில் பல மீன்களைப் பிடிப்பவர் அவற்றுடன் கொண்ட சிப்பிகளைப் பன்னாடையால் அரிக்கப் பெறும் மகிழ்ச்சி தரும் கள்ளின் விலையாகத் தருவர். இத்தகைய தன்மை பெற்ற பெரும் புகழ் பொருந்திய கொற்கைத் துறைக்குத் தலைவனான வெற்றிமிக்க வேலை யும் கடிய பெரிய யானையும், நெடிய தேரையும் கொண்ட பாண்டியன் நெடுஞ்செழியன் மலை போன்ற நீண்ட கோயி லையுடைய மதுரை நகரில் வெற்றிக் களிப்பால் ஆடிய போது எழுந்த ஆரவாரத்தைப் போல், உன் செயல் பலராலும் துற்றப்படுகின்றது. எனவே தலைவியின் சினத்தை என்னால் தணிக்க இயலாது, என்று வாயில் வேண்டிச் சென்ற தலை வனிடம் தோழி வாயில் மறுத்துச் சொன்னாள்.
213. அகன்று போ தலைவ பெரும் பெயர் மகிழ்ந பேணாது அகன்மோ! பரந்த பொய்கைப் பிரம்பொடு நீடிய முட் கொம்பு ஈங்கைத் துய்த் தலைப் புது வி ஈன்ற மாத்தின் இளந் தளிர் வருட, வார் குருகு உறங்கும் நீர் சூழ் வள வயல் கழனிக் கரும்பின் சாய்ப் புறம் ஊர்ந்து, பழன யாமை பசு வெயில் கொள்ளும் நெல்லுடை மறுகின் நன்னர் ஊர! இதுவோ மற்று நின் செம்மல்? மாண்ட மதி ஏர் ஒள் நுதல் வயங்கு இழை ஒருத்தி - இகழ்ந்த சொல்லும் சொல்லி, சிவந்த ஆய் இதழ் மழைக் கண் நோய் உற நோக்கி, தண் நறுங் கமழ் தார் பரீஇயினள், நும்மொடு ஊடினள் - சிறு துணி செய்து எம் - மணல் பலி மறுகின் இறந்திசினோளே.
- மதுரை கூல வாணிகன் சாத்தனார் அக 306