பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

185


கூறுவர். அங்ஙனம் கூறுவதற்கு நீ அத் தகைய கூட்டத்தை அத் தலைவனுடன் உடையாயோ என்று நீ கேட்பாயாயின், விளங்கும் அணியை தோழியே, நான் சொல்வதைக் கேட்பாயாக:

அலர் தூற்றுவதையே நோயாய்க் கொண்டிருப்பவர் தீய மகளிர். அவர் ஆராய்ச்சி செய்யாது இது தகாது எனக் கூறிய சொல் இவளுக்குப் பொருந்தாது” என்று உணராமல், நீயும் அவர்கள் கூறியதையே கூறியது ஏன்? சிவந்த விரல் மேலும் சிவப்பு அடைய நேரும்பொழுது நின்று பறிக்கின்றாய் என்று கூறி எனக்கு இரங்கி, அவன் கடல்நீர் வந்து ஏறிய கழியில் உள்ள தண்டான் கோரையைப் பறித்துக் கிழித்துப் பாவை யாக்கித் தந்தான் என்ற அந்தச் சிறிய உதவிக்காகவா?

தீயவர் என்று எல்லாராலும் கைவிடப்பட்ட மகளிர் அங்ஙனம் கூறுதல் தீயது என்று உணர்கின்ற திறம் இல்லாது, பல முறையும் கூறிய சொல் பொய்யாகக் கெடும்படி தவிர்வதின்றி, என்னை நீ சினத்தற்கு வந்தது ஏன்? நீர் நிலை யில் யான் புகாமல் மீள, அவன் அதைக் கண்டு பெரிய நீர் நிலையின் மலரைப் பறித்துப் புற இதழை ஒடித்துத் தந்த அந்தச் சிறிய உதவிக்காகவா?

காவலை மேற்கொண்டு காக்கும் நம் தோழியர் காவல் பொய்யாய்ப் போகுமாறு இவ் ஊரவர் பலகாலும் கூறியதை நீ பொய் என்று உணராதவளாய் இவளுக்கு (எனக்கு) உரியது என்று கலக்கம் அடைந்தவரைப் போல் இருந்தது ஏன்? ‘நீ தொய்யில் எழுத அறியாய் என்று சொல்லி வளை வான முன்கையை அவன் பிடித்து மூங்கில் போன்ற தோளில் கரும்பை எழுதிப் பின் அத் தொய்யில் குழம்பால் மேலும் எழுதுவதற்கு உரியவற்றை எழுதின அச் சிறிய உதவிக்காகவா?

ஆயிழாய், நெஞ்சில் நிகழ்ந்த இக் காரியம் இனித் தெளியச் செய்வது அரிது. இனி நம் வதுவையில் நம் சுற்றத்தவர் ஒன்றுகூட விரும்பிச் செய்யும் செயலை இன்று இவ் இடத்தே இவ் ஊர் விரும்பி இருந்ததாயின் அதற்கு நாம் செய்யக் கூடியது ஏது? என்று தலைவி தோழிக்குக் கூறினாள்.