பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/249

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - மருதம்


குற்றம் அற்றுச் சிறந்த உன் ஒழுக்கத்தால் கடல் மீதே தோன்றி இருளைக் கெடுக்கும் ஞாயிறு போன்று இவ் உலகத்தில் உள்ள பகைவர் நெஞ்சம் அஞ்சுமாறு செய்யும் கொடுந்தொழிலையும், நெடியதாய்த் தோன்றும் ஏனைய வற்றின் உயர்ந்த குடையைத் தமக்கு நிழல் என்று அடைந்த வர்க்குக் கதிரைச் சொரியும் தண்மதி போன்ற குளிர்ச்சி யையும், அகன்ற உலகத்தில் உள்ள எந்த நாட்டவரும் வணங்கிப் புகழும் ஒலிமிக்க முரசினை உடையவனே!

நீ அன்பு கொண்டு உன்னைப் பிரியேன் என்று தெளிவித்த சொல்லை இவையே விரும்பப்படும் சொற்கள் என்று எண்ணித் தெளிந்தவள். அவளின் பல இதழ்களை உடைய மலர் போன்ற கண், நீர் நிறைய நீ கானுமிடத்து அரிய தவத்தையுடைய அறம் வளர்த்த தென்முகத்தவனைப் போல் யாவரிடத்தும் பொய் கூற மாட்டாய் என ஐயம் இல்லாமல் உன்னைப் புகழ் கின்றது உலகம். இத்தன்மை நினக்குக் கெட்டுப் போகாதோ?

மனம் கலங்குகின்ற வருத்தத்தை அடைந்து மணம் கமழும் உன் மார்பை விரும்பியவளின் தொடி முன்கை யினின்றும் கழல நீ காணுமிடத்து, நீரைச் சுரந்த முகில் அந் நீரைப் பெய்தது போல், உன்னைச் சூழ நின்று இரந்த பொருளை நச்சுதலைக் கெடுக்க மாட்டாய் என்று உலகத்தவர் கூறும் சொல் உனக்குக் கெட்டுப் போகாதோ?

மனம் அழிகின்ற நினைவு வருத்துதலால் உன் அருளை விரும்பிக் கலங்கியவளின் ஒளியைப் பெற்ற முகம் பசலை படரக் காணுமிடத்து, உயிரை உடலினின்று போக்கும் இய மனைப் போன்று யாவரையும் உலகத்தில் வாழும் எல்லை யிலே நிறுத்திய கோலால் முறைமை செய்வாய் என்று உலகம் நின்னைக் கூறும். அச் சொல் உனக்குக் கெட்டுப் போகாதோ? எத்தகையவரின் வருத்தத்தையும் போக்கும் அதனால் இனிய முயக்கத்துக்குரிய அகன்ற மார்பை உடையவனே: நீ புணரும் துணை என்று எண்ணிப் புணர்ந்தவள் தன் இயற் கையான நலத்தையும் இழந்தனள். இத் தன்மை உடையவனாய் நீ உள்ளனை. இது நினக்குக் கொடியது என்று நின்னைச் சினக்க வேண்டுமோ? நீயே அருள் செய்வாயாக! என்று பரத் தையர் பாங்கிருந்த வந்த தலைவனை தோழி இறஞ்சினாள்.