300
அன்பொடு புணர்ந்த ஐந்திணை - மருதம்
இழிந்து நீராடும் மகளிரின் மடப்பம் உடைய கூந்தலில் நின்று வடிந்த தேன் சேர்ந்த குளிர்ந்த மலர்களும் ஆடவர் அகன்ற மார்பிலிருந்து சேர்ந்த மலர்களும் இதழ்களும் பொருந்தப் பெற்றது; முத்தைப் போன்று விளங்கும் மீன் களையுடைய வானத்தில் உள்ள பெருகிய அகன்ற கங்கை ஒழுகும் கூற்றை ஒத்தல் வண்டுகள் இசைபாடும் இவ் வையை ஆற்றுக்கு எக் காலத்தும் பொருந்தியிருக்கும் இயல்பாகும்.
மங்கையரின் ஒளி மிக்க மை பூசப் பெற்ற கண் எனும் கெண்டை மீன்கள் உண்ணல், நீரில் ஆடுதல், தாம் காதலருடன் ஊடுதல் என்னும் மூன்று காரணங்களாலும், ஏற்கெனவே சிவந்த நிறம் மேலும் சிவக்கும். பல வரிகளை யுடைய வண்டுகள் கூட்டம் தம் வாயில் சூழ்ந்து மொய்க்கும் அழகுடனே, கூந்தலின்ன்று நீங்கும் தன்மையுடைய பூவினின்று தேன் துளிக்கவும், ஒரு தலைவன் மிக்க நீரில் ஆடும் பரத்தையரை மீண்டும் மீண்டும் தழுவுவான். அதனால் நெகிழ்ந்து அழிந்ததும் அழியாததுமான கத்துாரிக் குழம்பு உடைய மார்பினனான அத் தலைவனின் தோற்றம், பனியால் வளைந்து விளங்கி அப் பணியின் பாரம் உலர்ந்தவுடன் காற்றால் நிமிர்த்தப்பட்ட மூங்கில் அக் காற்றால் தள்ளுதலால் உயர்ந்து தாக்குதலால், தன்னிடம் தொடுக்கப் பட்ட தேன் உடைந்து ஒழுகும் மலையினது தோற்றம் போல் விளங்கும். இவ்வாறு தோன்றச் செய்தல் பாண்டியனது வையை ஆற்றின் இயல்பாகும்.
வையை ஆறே! தலையில் மாலைபுனைந்தவராய் மார்பில் மாலையுடையவராய் ஆடவரும் நறுமணம் கமழும் மாலை அணிந்த மகளிரும், பொருள்களைத் தானம் பண்ணி, அதன் பயனான இன்பத்தை துய்த்துண்ணவேண்டி நாள் தோறும் நின்னிடம் நீராடுபவர். ஆதலால் அவர் உனக்குக் கொணரும் காணிக்கைப் பெருளான பொன்மீன் முதலியவையும் அவர் அணிந்த நறிய சந்தனக் குழம்பு முதலியவையும், அவர் எழுப்பும் அகிற் புகையும், நினக்குத் தரும் உண்டியும் குறையாமல் நிறையும் பொருட்டு முகில் மழை நிரம்பப் பெய்ய, நினக்கு அம் மழையினால் ஏற்படும் வெள்ளம் பெருகி எக் காலத்தும் வற்றாது நிறைவதாகுக.