தொகை - வகை - உரை : த. கோவேந்தன் : 31
மணிகளால் அலங்கரிக்கப்பட்ட யானைகளையும் ஒட்டம் அமைந்த தேரினையும் போர் வன்மையையும் உடைய பாண்டிய மன்னனின் வையை ஆற்றில் உள்ள திருமருத முன் துறை என்ற பெயர் கொண்ட நீராடும் துறையில், கேட்டாரைக் கவர்ந்து கொள்ளும் தன்மை கொண்ட யாழையுடைய பானர்கள் மருதப் பண்ணினைப் பாடு வாராக! அப் பாட்டை மக்கள் தாமும் பாடிப் பாடிப் பாய்ந் தோடும் நீரில் ஆடி ஆடி மகிழ்வாராக,
தங்களுக்கு அருள் செய்யும் தத்தம் கணவருடன் மகளிர் ஊடினர். ஊடவும், கணவர் பணிந்த சொற்களைச் சொல்லி அவ் ஊடலை அகற்றினர். மங்கையர் ஊடல் நீங்கியபோது கணவரை விரும்பிக் கூடினர்; மகிழ்ந்தனர். சிலர் தம் காதலரைத் தேடினர். அவரைக் காணப் பெறாமல் உள்ளம் குலைந்தனர். வையை ஆற்றைத் தொழுது சிலர் வாழ்த்தினர்.
இங்ஙனம் சிறந்த அழகையுடைய வையையில் உள்ள இந்தப் புதிய நீர், குணத்தினால் பெரியவரே, முழுவதும் எச்சிலாக ஆகும்படி பருகி உமிழ்ந்தது போல் விளங்குகிறது. இதைக் காணுங்கள் எனச் சிலர் கூறினர்.
அவ்வாறு நீராடிய மகளிரும் ஆடவரும் அணிந்திருந்த மணம் கமழும் தாரும் கோதையும் நறுமணப் பொருள்களும் மங்கையர் கூந்தலிடத்தினின்றும் ஆடவரின் பித்தையிடத்தி னின்றும் நழுவி வீழ்ந்தனவாகிய மலரும் ஆகிய இவற்றால் ஆன நிறம் தோன்றுதல் அல்லது இந்த வையைப் பேரியாறு தன் நீரின் உண்மைநிறம் எங்கும் ஒரு சிறிதேனும் தோன்று மாறு விளங்கவில்லை.
இந்த வையையாறு மழை நீர் பெறாது வற்றிக் கிடக்கும் குளத்தில் ஊர் மக்களால் வாய் பூசப்பட்டும் ஆடப்பட்டும் கிடக்கும். கழுவப்படும் தன்மையுடைய மஞ்சனப் பொருள் களும் குங்குமக்குழம்பு முதலியனவும் கலந்து கலங்கலாய் வழிந்த நீர் போன்று நீர் உடையதன்றி சிறந்த நல்ல நீரை புடையதன்று.