பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - மருதம்


தேம் பொதிக் கொண்ட தீம் கழைக் கரும்பின்

நாறா வெண் பூக் கொழுதும்

யாணர் ஊரன் பாணன் வாயே.

- வடம வண்ணக்கன் தாமோதரன் குறு 85

“ஊரினுள் வாழும் துள்ளல் நடையை உடைய ஆண் குருவி, கருப்பம் முதிர்ந்த பெண் குருவிக்குக் கரு உயிர்த்தற் குரிய இடத்தை அமைக்கும் பொருட்டு, சாறு பொதிந்த இனிய கோலை உடைய கரும்பினது மணம் வீசாத வெள்ளிய பூவைக் கோதி எடுக்கும் புது வருவாயை உடைய ஊருக்குத் தலைவன், பாணனது சொல்லில் மட்டும் தான் மற்றவர்களை விட இனிமை இடையவன் ஆவான். தலைவியின் பால் மிகுந்த அன்பினை உடையவன் ஆவான்; உண்மையில் அங்ஙனம் அல்லன்” என்று தோழி உரைத்தாள்.

16. அறிவில்லாதவர்கள் இவ்வூரார்

பா அடி உரல பகுவாய் வள்ளை ஏதில் மாக்கள் நுவறலும் நுவல்ப; அழிவது எவன்கொல், இப் பேதை ஊர்க்கே? - பெரும் பூண் பொறையன் பேஎம் முதிர் கொல்லிக் கருங்கட் தெய்வம் குடவரை எழுதிய நல் இயல் பாவை அன்ன இம் மெல் இயல் குறுமகள் பாடினள் குறினே. - பரணர் குறு 89

“பெரிய அணிகலன்களை அணிந்துள்ள சேரனுடைய அச்சம் தரும் கொல்லி மலையில் உள்ள கரிய கண்களை உடைய தெய்வத்தால் அம் மலையின் மேற்குபக்கத்தில் எழுதி வைக்கப்பட்ட நல்ல அழகினை உடைய கொல்லிப் பாவையை ஒத்த மெல்லிய இயல்பினளான தலைவி தலை வனுடைய பெயரை உரல்பாட்டில் பாடி நெல்லை இடிக்கும் பொழுது, அயலார்கள் அதனைக் கேட்டுப் பழி கூறலாயினர். இத்தகைய அறிவின்மை உடைய ஊரினர் குறைகூறும் சொற்களின் பொருட்டு வருந்துவதால் பயன் என்ன?” எனத் தோழி உரைத்தாள்.