பக்கம்:அபிதா.pdf/106

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

100 O லா. ச. ராமாமிருதம்



பிறகு நாகரிகத்தின் அறிகுறி காப்பி என்ற பேரில் காவித்தண்ணீரின் குமட்டல் அடங்கினதோ யில்லையோ: “வாடாப்பா எண்ணெய் தேய்ச்சுக்கோ”

-ஐயையோ என்ன நடக்கிறது?

-கண்ணில் ஒரு கரண்டி எண்ணெய், விழிகளில் திடீரென வைத்த நெருப்பில் உடலே நெளிகிறது.

“உஸ் அப்பப்பா!”

தொண்டையில் எச்சில் கொழகொழத்துக் கடைகிறது. விழியுள் என்னைச் சூழ்ந்து கொண்ட மதுரை எரிப்பில், எங்கிருந்தோ ஒரு குரல்- குருக்கள் அல்ல; வந்த அன்று பேசினபின் அந்த மனிதன் வாய் அனேகமாய் பூட்டுதான்-ஒரு குரல், மந்திர உச்சாடனம் போல்:

“நாள் கழிச்சுத் தேய்ச்சுண்டாலே இப்படித்தான். கண்ணிலிருந்து ரெண்டு சொட்டு ஜலம் கழண்டால் சரியாப் போயிடும். மாமாவைக் கையைப் பிடிச்சு அழைச்சுண்டு போங்கோ. அபிதாதை வென்னீரை விளாவச் சொல்லியிருக்கேன். நான் கடைவரைக்கும் போய் வரேன், கண்டந்திப்பிலி வாங்க!”

பேசிக்கொண்டே குரல் தூரத்தில் ஓய்ந்தது.

என்னை ஒரு கை பிடித்தது, மெதுவாய்த்தான். என்னுள் சினம் மூண்டது. என்னைப் பிடித்த கையை வெடுக்கென உதறினேன். உதறின கை என்னைத் திரும்பவும் பிடிக்க முன் வரவில்லை. ஐயோ, விழி வயண்டு விடும்போல் வதைக்கிறதே! கண்ணைக் கசக்கிய வண்ணம், நடுக் கூடத்தில், நடுக் காட்டில் நிற்கிறேன்.

என் பக்கத்தில் ஒரு சிரிப்பு. விழித்துப் பார்க்கிறேன். நல்ல கண்களே நெற்றிக் கண்களாகிவிட்டன.

என் அவஸ்தை சாவித்ரிக்கு நகைப்பு. நகைக்க இப்போ அவள் முறை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அபிதா.pdf/106&oldid=1130554" இலிருந்து மீள்விக்கப்பட்டது