பக்கம்:அபிதா.pdf/111

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அபிதா O 105


தரிசனி!
கரடிமலைச் சாரலில்,
பல்லக்குத் திரைவிலக்கி
எனக்குக் கண் காட்டிய ராஜகுமாரி!
ஹிமவான் புத்ரி ஹைமவதி!
உங்கள் அத்தனை பேரின் பூர்வமுகியெ இப்போது
நான்பெற்ற உக்ரமுகத்தில் அபிதாவில் அடையாளம் கண்டுகொண்டபின், நீங்கள் அனைவரும்
நான் கண்ட முகத்தின் நாமார்ச்சனையாகத்தான்
தெரிகிறீர்கள். இந்தச் சமயம், அபிதா, நீ கூட
எனக்கு அவசியம் தானோ?

ஆனால் அது என் விசுவரூபத்தின் வியப்பு. இப்போது நீயும் எனக்கு ஐக்யமாதலால் உன்னை என்னிலிருந்து தனியாய்ப் பிரித்துப் பார்க்க இந்த வேளையில் வழியில்லை. ஆனால் வியப்புத்தான். சந்தேகமில்லை. நீயலாது விழிப்பு ஏது? அபிதா, நீ என் காய கல்பம்.

சாவித்ரி என்னைக் கவனிக்கிறாளோ? அவள் பார்வையில் கூர்மை என் மனப்ரமை தானோ? நான் போகையில், வருகையில் அவள் கண்கள் மெய்யாவே என்னைத் தொடர்கின்றனவோ? எங்கிருந்து திடீரென என் நடையில் இம் மிடுக்கு? குதிகால் குமிழ் பூமியில் பாவாத பரபரப்பு? என் கடைக் கண்ணில் அவ்வப்போது நான் உணர்ந்த தீப்பொறி? என்னதான் அடக்க முயன்றும், உடலின் அசைவில், உள்ளே எரியும் ஜ்வாலையின் குபீர்? இந்தக் குங்கிலியம் எப்படி என்னுள் வந்தது ? இதுதான் ஆத்மாவின் சுகந்தமா? திடீரென்று மட்டற்ற மகிழ்ச்சி. இந்த மகிழ்ச்சியில் சாவித்ரி முகத்தில்கூட அபிதாவின் சாயலை லேசாகக் காண்கிறேனோ? உடம்பு சரியாக இருக்கிறேனோ? திருட்டுத்தனமாய் வலது கை நாடியை இடது கையால் பிடித்துப் பார்த்துக் கொள்கிறேன். சாவித்ரியின் ஆச்சரியந்தான் என் ஆச்சர்யம் கூட.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அபிதா.pdf/111&oldid=1130559" இலிருந்து மீள்விக்கப்பட்டது