பக்கம்:அபிதா.pdf/21

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



அபிதா O 15


“கரடிமலையா?”- அவள் புருவங்கள் கேள்வியில் நெறிந்தன.

“நான் எங்கிருந்து இங்கு வந்தேனோ அந்த இடம்” சுதாரித்துக் கொண்டேன். எனக்கே ஆச்சரியமாயிருந்தது. என் புது வாழ்வைப்பற்றிக் கொள்ளும்பாடில், பற்றியபின் மேல் படர்ந்த பாசியில், எத்தனை வருடங்களின் புதையின் அடியினின்று கரடிமலை இப்போது எழுந்தது!

“கரடிமலை என்பது ஒரு குன்று. குன்றின் பெயரே ஊருக்கு. கரடி நின்று கொண்டிருப்பதுபோல் குன்றின் உருவம்.”

“ஒ”

கரடிமலையின் நினைப்புடன் சாவித்ரியைப் பார்க்கையில் யாரோ அன்னியனைப் பார்ப்பதுபோல் இருந்தது. தூக்கத்திலேயே நடந்து வந்து திக்குத் தெரியா இடத்தில் விழித்துக் கொண்டாற்போல், யார் இவள்? ஒ, குறுக்கே முளைத்த மனைவியல்லவா?

“ஏன் ஒரு மாதிரியா இருக்கேள்?”

“இருக்கேனா என்ன?”

திடீரென என் பக்கமாய்ச் சாய்ந்து என் கால்களை அணைத்துக்கொண்டாள்.

“இந்தச் சமயம் நீங்கள் ரொம்ப அழகாயிருக்கேள்.” பேச்சு மூச்சாய் சரிந்தது. “சில சமயங்களில் நீங்கள் ரொம்ப நன்னாயிருக்கேள், திடீர்னு வயசில் பாதியுதிர்ந்து சட்டையுரிச்சாப்போல், புருவம் மட்டும் நரைக்காமல் இருந்தால் இன்னும் நன்னாயிருப்பேள். நீங்களா மாட்டேள். நான் மையைத் தீட்டி விடட்டுமா?”

“புருவம் நரைக்காமல் இருந்தால் நன்னாயிருப்பேன்”

“தலை நரைக்காமல் இருந்தால் ரொம்ப நன்னாயிருப்பேன்”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அபிதா.pdf/21&oldid=1125643" இலிருந்து மீள்விக்கப்பட்டது