பக்கம்:அபிதா.pdf/25

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அபிதா O 19


கிடக்கும் பாம்பின் துடிப்புப்போல், தண்டவாளத்துக்கு மூச்சு இறைப்பது போல் எங்களுக்கு ஒரு ப்ரமை.

“அம்பி, இதில் ஒரு நாள் ஏறி நீ போய்விடுவையோன்னோ?”

“ஆமாம். கரடி மலையிலிருந்து தப்ப வேறு என்ன வழி?”

எங்கள் பின், எங்கள்மேல், மலை முன்னங்கால்களைத் தூக்கிக்கொண்டு ஓங்கி நின்றது.

கடவுளுக்கு அஞ்சலி செலுத்துகிறது என்று ஐதீகம் கொண்டாடிற்று. ஆனால் கரடி எங்களை அணைக்க வந்ததென்ற நினைப்பில் கூசி, எனக்குக் கண்கள் தானே மூடிக்கொள்ளும்.

மலைமேல் குருக்கள் பூஜை செய்கிறார். அடிவாரத்தில் அவருக்குக் காத்திருக்கிறோம்.

“நான் ரயிலில் போனதேயில்லை.”

“நிஜம்மா? ஒரு தடவை கூட?”

“எங்கள் உறவுக்காராள் ஊருக்கெல்லாம் ரயில் கிடையாது. எல்லாம் சுற்று வட்டாரத்தில், கிட்டக்கிட்ட. மாட்டு வண்டி, கால்நடை, மழை வந்துட்டா ஆறு தாண்டப் பரிசல்-” அவள் என்னைப் பார்க்கவில்லை. எதிரே கத்தாழைப் புதரில் எங்களைக் காட்டிக் கொடுப்பதுபோல் கழுத்தையாட்டும் ஒணான் மேல் அவள் கவனம் பதிந்திருந்தது. அவளே அப்படித்தான். பேச்சு இங்கே, பார்வை எங்கோ.

“சக்கு, நீ என்னோடு வந்துடறையா?”

ஒரு வயதுப் பெண்ணிடம் இவ்வளவு துணிச்சலாக வார்த்தைகள் எப்படிப் பல்லைத் தாண்டின எனும் வியப்பினின்று பின்னர் நான் முற்றிலும் மீண்டதில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அபிதா.pdf/25&oldid=1126398" இலிருந்து மீள்விக்கப்பட்டது