பக்கம்:அபிதா.pdf/41

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அபிதா O 35


நானே என் பெண்ணோடு பேச முடியாது போலிருக்கே!'ன்னு இரைச்சல் போட்டப்புறம்தான் அம்மா சித்தே அடங்கினாள். அப்புறம் அவளுக்கும் தள்ளல்லே. கோவில் வேலையிலே பாதி அப்பாவுக்கு ஒத்தாசையா நானே பண்ற நிலைமை வந்தப்புறம் 'உனக்கு நீதான் காவல்’னு சொல்லியே விட்டுட்டாள்.

“எல்லாமே முடிந்தவரைக்கும்தான்!"

“என்ன கேலி பண்றயா?”

“கேலியில்லை. உண்மையே அதுதானே! எல்லாம் முடிந்தவரைக்கும்தான்."

"அம்பி அப்புறம் உனக்கு நினைவிருக்கா?”

“சக்கு உனக்கு நினைவிருக்கா?”

மாறிமாறி நானே அம்பி நானே சக்கு வாய்விட்டுப் பேசாத பாஷையில்

மனம்விட்டு ஒருவருக்கொருவர் எண்ணியதாய் எண்ணிக் கொண்ட எண்ணங்களை எண்ணி எண்ணி நினைவின் சுவடுகளில் நினைவைப் பொருத்தி வைத்துப் பார்த்துக் கொள்வது தவிர வேறென்ன செய்யமுடிகிறது?

இப்போ சக்கு எப்படியிருப்பாள்?

ராகம், தாளம், பல்லவி.

ப த த னி நி த த ம ஸ ம க ஸ.

சக்கு எப்படியிருப்பாள்?

‘லொடக்’ ‘லொடக்’ ‘லொடக்’- இதோ வண்டி அக்ரஹாரத்தின் முனை திரும்பி விட்டது. அக்ரஹாரமாம்! அந்த நாளிலேயே நாலு வீடுகளில் மூணு பாழ். இப்போ நாலாவது நடுவீடு குருக்கள் வீட்டுக்கும்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அபிதா.pdf/41&oldid=1126497" இலிருந்து மீள்விக்கப்பட்டது