பக்கம்:அபிதா.pdf/44

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38 0 லா. ச. ராமாமிருதம்

அடுத்தபடி என் நா கண்ட சொல்: “அப்பா-?’’

“அப்பா கோவிலுக்குப் போயிருக்கா.”

“அபிதா வாசல்லே யாரு?” உள்ளிருந்து ஒரு பெண் குரல். வெளி ஆளை உள்ளிருந்தே மோப்பங் கண்ட குரல். சற்று உர்த்தண்டம்தான்.

“யாரோ அப்பாவைத் தேடிண்டு வந்திருக்கா-”

ஈரக்கையைத் தலைப்பில் துடைத்தடி ஒரு மாது உள்ளிருந்து வந்தாள். வாட்ட சாட்டமான தேகம். கண்டதும் கண்ணைச் சட்டென உறுத்துவது கன்னத்தில் பெரிய மறு. என்னைப் பார்த்ததும் மேலாக்கைத் தோள் மேல் இழுத்துக்கொள்ள முயன்றாள். ஆனால் அந்த நாஸுக்கான ஸாஹஸம் அந்தத் தேகவாகுக்கு ஒவ்வவில்லை. அமரிக்கையின் அடையாளமாயில்லை. மறந்து போனதை நினைவுபடுத்திக் கொள்ளும் சைகையாய்த்தான் அமைந்தது.

“வாங்கோ! நீங்க யாரு, தெரியல்லியே.”

“நொண்டி குருக்கள்-” என் குரல் தடுமாறிற்று.

“அவர் காலம் ஆயிடுத்தே”

“மாமி?-”

“எந்த மாமி? மாமியாரா? நான் வரத்துக்கு முன்னாலேயே அவர் சுமங்கலியா போயிட்டாரே!”

எனக்கு கண்கள் இருட்டின. திடீரென வேளையில் அஸ்தமனம் படர்ந்துவிட்டாற்போல் தோன்றிற்று.

‘அப்படின்னா- அப்படின்னா- சக்கு?" என் எதிரே தாவணியின் கொடுக்குநுனியை விரல்களிடையே திருகிக் கொண்டு நின்ற சக்குவைப் பார்த்து மலர மலர விழித்தேன்.

அந்த ஸ்திரீயின் கன்னத்து மறு திடீரென சிலிர்த்துக் கொண்டு இன்னும் பெரிதானாற்போல் எனக்குப் பட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அபிதா.pdf/44&oldid=1126503" இலிருந்து மீள்விக்கப்பட்டது