பக்கம்:அபிதா.pdf/52

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46 0 லா. ச. ராமாமிருதம்


I don't care.

என்னுள் நான் காணும் சூன்யத்தில், எனக்கு வைக்கும் பெரிய சூன்யத்துள் மறைந்து போன சின்ன சூன்யம்.

வாய்க்கால் தாண்டி, ஐயனார் கோவில் மதில் திரும்பினதுமே கண்ணுக்குக் காத்திருப்பதே போன்று, சட்டெனக் கண்ணுக்கெட்டியவரை வயற்காடுதான். இந்த வழிதான் நான் ஊரைவிட்டு ஒட அந்த நாள் ரயிலைப் பிடிக்க ஒடி வந்த வழி. அன்று, கல்லும் முள்ளும், கதிர்களை அறுத்தபின் துருத்திக் கொண்டு நின்ற கட்டைப்புல்லும் காலில் பொத்தன. இன்று, முகம் திரும்பிய இடமெல்லாம் கடலாய்க் கண் குளிரப் பசேல். மாலைக் காற்றில், கதிர்கள் ஒரே சீராய் அங்கம் அங்கமாய் அலைவிதிர்கையில், பிரும்மாண்டமான உடல் திரட்சியில் ஒரு மாது, பூமியே படுக்கையாய்ப் புரள்வது போன்றிருக்கிறது.

தென்றலின் இதவு உடலின் ரோமக்கால்களின் வழி உள் புகுவது உணர்கிறேன்.

அதோ தகரக் கொட்டகைகள் இரண்டு தெரிகின்றன. பிறவியின் பிரயாணம் முடியும் இடம் தகரக் கொட்டகைதான். நான் இங்கு விட்டுப் போன பின்னர் இத்தனை வருடங்களில் எரிந்து நீர்த்த எத்தனை எத்தனையோ அஸ்திகளில், கண்ணுக்கெட்டாப் பொடிப் பொடி ஸன்னங்கள் காற்று வாக்கில் சிதைப்படுகையினின்று எழும்பி பூமியின் நான்கு- அல்ல- நாற்பதினாயிரம் திக்குகளில் பறந்து செல்கையில், என்மேல் ஒற்றுவது எது அவள் சின்னம்?

இந்த உறுத்தலுக்குப் பதிலிறுப்பது போன்று, பிரும்மாண்டமான அங்கத் திரட்சியில், பூமியே படுக்கையாய்ப் புரண்ட பசுமை வடிவத்தினின்று, பிரும்மாண்டமான பெருமூச்செறிந்தது. எனக்கு ஏதோ சேதி காற்று வாக்கில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அபிதா.pdf/52&oldid=1126887" இலிருந்து மீள்விக்கப்பட்டது