பக்கம்:அபிதா.pdf/53

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



அபிதா O 47


தவிக்கிறது... என்னைப்போல் ஒரு சின்ன உயிர், உடல் கூட்டினின்று விடுபட்டு, அனலாகிப் புனலாகிப் புவியுமாகி, இப்பரந்த வெளியின் பேருயிருமான பின்னர், அந்தப் பாஷை எனக்குப் புரியாதா புரியாதா புரியாதா...

வான் பாதியும் பூமியின் பாதியும் விளிம்பு சேர்ந்த முழு உருட்டு இப்பூமி. நித்யத்வம் உகுத்த கண்ணீர்த் துளி. அதன் நீரோட்டத்தில் ஆடும் நிழல்கள் நாம். நம்மை நாம் என்று கொண்டதன் விளைவாய் நேர்ந்த நம் வாழ்வுகள், தாழ்வுகள், அஸ்திகள், அஸ்தியில் பூத்த நினைவுகள், நாம் எல்லோருமே கண்ணீரின் நிழல்கள். இங்கு ஏதோ அற்புதம் என்னை சாக வைத்து நிகழ்ந்து கொண்டிருக்கிறது. என்ன அது? வான்வீச்சில் தேடுகிறேன் பார்வையின் வாள் வீச்சில் சின்னாபின்னமாய், மேகச்சிதர்கள் அந்திஜாலவர்ணங்கள் பூரித்துத் திக்குத் திகைத்து நிற்கின்றன, நகர்கின்றன, விரைகின்றன, அலைகின்றன; அத்தனையும் ஊமைக்குழந்தைக்குள். அவைகளின் தெய்வீகத் திகைப்பின் கனம், என் மார்பு அழுந்துகிறது. அவைகளின் வாயடைத்த வேதனை மோனத்தில் கூக்குரலிடுகிறது. உணர்ச்சிகள், உணர்வுகள், அத்தனையின் ப்ரதிநிதியாய், மோனத்தின் ஒரே வாய் ஒரே குரல் ஒரே கேள்வி ஒரே பதில் இத்தனையின் ஒரே குவிப்பின் ஒரே கூர்ப்பாய்த் திடீரெனக் கரடிமலை, காற்றில் ஆடும் திரைச்சீலையில் தீட்டிய சித்திரம் போன்று, கண்ணுக்கும் நெஞ்சுக்கும் படபடத்துக்கொண்டு எழுகின்றது.

மோனத்தின் மூலக்கோபுரம். எதிர்மறைகளின் இழைவு.

கண்ணெதிரிலேயே குன்றின் பின்னணியில், கோபக் கண்ணாய் ஒளிக்கதிர்கள் நரம்போடிய செவ்வானம் சட்டெனக் கோபத்தணலில் மருதுவிடத் தொடங்கி விட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அபிதா.pdf/53&oldid=1126888" இலிருந்து மீள்விக்கப்பட்டது