பக்கம்:அபிதா.pdf/55

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அபிதா O 49


இதோ பார் கரடிமலை திடீரெனக் குலுக்கிக் குலுக்கி பூஜைக்குப் பறித்த மலர்கள் குவிந்து புலுபுலுக்கும் புஷ்பக் குடலை. கட்டைவிரலும் பாம்பு விரலும் மட்டும் நுனி சந்தித்து, ஒவ்வொரு சந்திப்பும் ஒரு லக்னம், லக்னத்தின் முத்திரை-அவ்வளவு நுட்பம், அவ்வளவு ஜாக்கிரதை, அவ்வளவு பக்தியுடன், காம்புக்கு நோகாது ஆய்ந்தது. அவைகளே அறியாது பறித்த மலர்கள். மேகங்கள் திடீரென அவ்வளவு நளினத்தில் அலர்ந்துவிட்டன.

அவை தமக்குத்தாமே ஏதோ கவிதை புரிந்துகொண்டிருக்கின்றன. மானிடர் மக்கு. நமக்குப் புரிய வைக்கும்நேரம் அவைகளுக்கில்லை. தேவையுமில்லை. பூரா புரிந்துகொள்ளும் சக்தியும் பாவிகள் நமக்கிலை. நெகிழ நெஞ்சம், பார்க்கப் பாக்கியம், மலரக் கண், படைத்தவர் கண்டுகொண்டேயிருக்கலாம். காண்பதும், கண்டதில் இழைவதுமன்றி கவிதையில் புரிந்து ஆகவேண்டியதென்ன?

குன்றின்மேல் ஒரு பெரும் புகை மண்டலம் தேங்கி நிற்கிறது.

இப்போது இருண்டது நேரமா? என் கண்களா?

மேகத்தைக் கடையும் சாக்கில், கரடிமலை காலத்தையே கடையும் மத்தாக மாறிவிட்டதோ? செவியோரம் யுகங்களின் ஒசை கடைகிறது. நெற்றிப் பொட்டின் நரம்பு மீட்டலினின்று குதித்தெழுந்த நாதபிந்து நான், என் சடலங்களைந்து அந்தரத்தில் மிதந்து செல்கிறேன். கரடிமலையா, இது கைலைமலையா? கைலைமலைச் சாரலில், எந்த லோகத்தின் எந்த நிமித்தத்தில், ஆண்டவன் சந்நிதானத்திலேயே வெட்டிய எந்த ஹோம குண்டத்தினின்று எழுந்த புகையிது?

    "ஸத்யோ ஜ்யோதி ஜூஹோ மிஸ்வாஹா ஆ:
     ஒம் பூர்ப் புவஸ்ஸூவஸ் வாஹா   ஆ"_

அ_4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அபிதா.pdf/55&oldid=1126897" இலிருந்து மீள்விக்கப்பட்டது