பக்கம்:அபிதா.pdf/59

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அபிதா O 53

தோளில் ரவிக்கை தையல்விட்ட இடத்தில் பளீரிட்ட சதை நெருப்பு நெஞ்சில் பற்றிக் கொள்கையில், இதுவரை சென்று போன வருடங்களில் அங்குக் குவிந்து அழுகிய குப்பை கூளங்கள், வயதின் சருகுகள் எரிகின்றன. நானே லேசாகிக் கொண்டிருக்கிறேன்.

ஏதோ லேசாய் ஒரு மெட்டை முனகியபடி ஏறுகிறாள்.

பாட்டு அல்ல. இளமையின் கீதம்.

இவள் இன்னும் தன் அழகை அறியாள். அதுவே இவள் அழகைப் பன்மடங்கு பெருக்குகிறது.

படிக்குப்படி வானம் தலைமேல் இறங்கி மெத்து மெத்தென மிதிக்கின்றது. தொட்டுவிடலாமோ? அது தான் கீழிறங்கிவிட்டதா, அல்ல நான்தான் உயர்ந்து விட்டேனா?

நீலமெத்தையில் பஞ்சு பறக்கிறது.

கரடிமலையே, நீ எங்கள் பெருந்தாய். நாங்கள் உன் குட்டிகள். நீ இப்போது எங்களை உன் மார்புற அணைத்துக் கொள்கையில், நாங்கள் உன் ஆலிங்கனத்துள் அமிழ்கையில். உன் இதயத்தில் புதைந்தோமா அல்ல, உன் கருவினுள்ளேயே புகுந்துவிட்டோமா? நீயே சொல்.

இல்லை, நீ சொல்லமாட்டாய். உன் மனம் கல். எங்கள் அனுபவம்தான் எங்கள் பேறு. எங்கள் பேறுதான் உன் பதில்- அவரவர் இஷ்டம் எண்ணம், நினைப்பின் வன்மைக்கேற்றபடி அவரவர் பேறு.

எத்தனைமுறை சக்குவும் நானும் உன்னை ஏறி இருப்போம்! அன்றுகூடத் தெரியவில்லை. இப்போது தோன்றுகிறது, அன்று ஏறியதற்கெல்லாம் பொருளும் பலனும் இன்று ஏறுவதில்தான் கிடைப்பதுபோல் என்ன பலன், என்ன பொருள் என்பதுதான் புரியவில்லை. ஏதோ சிக்குப் பிரிகின்றது. அதற்குமேல் புரியவில்லை. சோபன படத்தின் பெரிய பெரிய ஏணிபோல், இந்தப் படிக்கட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அபிதா.pdf/59&oldid=1126909" இலிருந்து மீள்விக்கப்பட்டது